சென்னை: பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக அரசுப் பள்ளிகளில் கடந்த காலங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது பள்ளி தொடங்கிய பிறகே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் இதுவரை மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை. ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பிற்கு ஜூன் 20ஆம் தேதியும், 11ஆம் வகுப்பிற்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். இதனையடுத்து, வரும் ஜூன் 13ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒன்று முதல் 9ஆம் வகுப்புகளுக்கு, மே 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டது. ஆசிரியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியிருக்க வேண்டும், ஆனால் தொடங்கப்படவில்லை.
மே 5ஆம் தேதி, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கப்பட்டு பொதுத்தேர்வு முடிவடைந்துள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் திங்களன்று (மே 30) முடிவடைய உள்ளது. இந்தச் சூழலில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 13ஆம் தேதியே மாணவர் சேர்க்கை தொடங்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: குரூப் 2,2ஏ தேர்வு: தற்காலிக ஆன்சர் கீ வெளியீடு