திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படைத் தலைவருமான நடிகர் கருணாஸ், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் அவரைச் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ” காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தேன். சட்டப்பேரவையில் இதனை தீர்மானமாக நிறைவேற்றிடவும் கோரியுள்ளேன்.
ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை எதிர்த்து பல கட்டங்களாக போராடிவந்த விவசாயிகள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். நீராவி, கரிசல்குளத்தைச் சேர்ந்த 15 பேர் கடந்த 16 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். வயது மூப்பை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளன்று அவர்களை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளேன்.
7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும் ஆளுநர் முடிவெடுக்க தயக்கம் காட்டுவது ஏன் என தெரியவில்லை. அரசியல் தலையீடின்றி இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்.
நடிகர் ரஜினி பா.ஜ.கவிற்கு ஆதரவான கருத்துகளை பேசிவருவதால்கூட வருமானவரித் துறை அவருக்கு விலக்கு அளித்திருக்கலாம். படப்பிடிப்பு நடப்பதே தெரியாமல் இருந்த இடத்தில், விசாரணை என்ற பெயரில் வருமானவரித் துறை சென்றதால் தற்போது ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடி நடிகர் விஜய்யின் பலத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்தியுள்ளனர்.
நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஏற்கெனவே விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். நானும் இரண்டு நாட்களில் மேல்முறையீடு செய்யவுள்ளேன். ஐசரி கணேஷ் சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவோடு எதையும் செய்துவிடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டுவருகிறார். இது கண்டிக்கத்தக்கது.
டெல்லி அரசியல் முடிவுகளில் ஆச்சரியம் ஏதுமில்லை. மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் இலவசமாக்கி, அதனால் அவர்கள் முழுவதுமாக பயனடையும்பட்சத்தில் எத்தகைய கட்சியோ, அதிகாரமோ மக்கள் மனதை கலைக்க முடியாது” என்றார்.
இதையும் படிங்க: 'ரஜினி கட்சி ஆரம்பித்தால் கூட்டணி குறித்து யோசிக்கலாம்' - ராமதாஸ்