கடந்தாண்டு ஜூன் மாதம் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலை எதிர்த்து, சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தேர்தலை ரத்துசெய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் தாக்கல்செய்த மேல்முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் நிலுவையில் இருந்துவருகிறது.
கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் முடிந்த பின்னரும் வழக்குகளைத் தொடர்ந்து நடத்துவது ஏன் எனப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும், தொழில்முறை அல்லாத 60 உறுப்பினர்களைத் தவிர்த்து, மற்ற வாக்குகளை எண்ணி பிரச்னைகளுக்குச் சுமுக தீர்வுகாண வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியிருந்தனர்.
மேலும், நடிகர் சங்கத்திற்கு மறு தேர்தல் நடத்துவதா? அல்லது ஏற்கனவே நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையை நடத்துவதா? என்பது குறித்து இருதரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குளை எண்ண வேண்டும் என விஷால் தரப்பும், மறு தேர்தல் நடத்த வேண்டும் என எதிர் தரப்பும் பதில் மனு அளித்தனர்.
இதனையடுத்து, நீதிமன்றத்தின் ஆலோசனையை இருதரப்பும் ஏற்க மறுத்ததால் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனத் தெரிவித்து, வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைசெய்து நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு உத்தரவிட்டது.
இதையும் படிங்க: பாலிவுட் போதை வழக்கு: படப்பிடிப்பை நிறுத்திவிட்டு கிளம்பிய தீபிகா!