நாடு முழுவதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பின்பற்றப்பட்டுவரும் ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கிடையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் ஒரே நாளில் 203 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு ஆயிரத்து 526 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் 144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றினாலோ, ஐந்து பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தலைவர் திரிபாதி எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “144 தடை உத்தரவை மீறி பொதுமக்கள் பலர் 4, 5 பேர் என ஒன்று கூடியும், வாகனங்களில் வெளியே சுற்றியும் தகுந்த இடைவெளியை பின்பற்றாமலும் வெளியே வருகின்றனர்.
இதனால் காவலர்கள் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தண்டனையும் வழங்கி வருகின்றனர். தற்போது கரோனா தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் உயர்ந்துகொண்டே வருவதால் 144 தடை உத்தரவை மதிக்காமல் எவ்வித காரணங்களுக்காகவோ நான்கு அல்லது ஐந்து நபர்கள் தெருக்களில் ஒன்று கூடினாலோ, வெளியே சுற்றினாலோ அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.
மேலும் இந்தத் தடை உத்தரவை பொதுமக்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: 40 அடி கிணற்றில் தவறி விழுந்த பெண்: உயிருடன் மீட்பு!