இலங்கை கொழும்புவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதனால் சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த விமானத்தில் வந்த இலங்கையைச் சேர்ந்த பெண் பயணியான அலகேஸ்வரி(48) என்பவரிடம் சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்யப்பட்டது.
அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால், தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில், அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 520 கிராம் எடையுடன், 18.8 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சுங்கத்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.