சென்னை: சென்னையை சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு 20 வயதில் மகளும், 10 வயதில் மகன் உள்ளனர். மகள் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மகன் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், இவர்களின் தந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். வேலைகளுக்கு செல்வதிலும் பெரிதும் நாட்டம் இல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
குடிபோதையில் தொந்தரவு
அடிக்கடி குடிபோதையில் வந்து மனைவி மற்றும் இரு பிள்ளைகளையும் கொடுமைகள் செய்து வீட்டில் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஜன.27ஆம் தேதியான நேற்று இரவு 11 மணியளவில் முழு குடிபோதையில் வந்து, தனது மகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டு, தவறாக நடந்துகொள்ள முயன்றுள்ளார்.
காவல்துறை விசாரணை
உடனே, அதைத் தடுக்கும் நோக்கில் அவரின் மனைவி, வீட்டிலிருந்த சுத்தியலைக் கொண்டு பலமாகத் தாக்கியுள்ளார். அதனால், தலையில் படுகாயம் அடைந்த அவர், கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
அதன் பின்னர், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளின் அழுகுறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது அவர் இறந்து கிடந்துள்ளார். உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அப்பெண்ணை வழக்கிலிருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இதையும் படிங்க: மருத்துவப் படிப்பை தன்வசமாக்கிய ஏழை மாற்றுத்திறனாளி மாணவி