சென்னை: சென்னை தரமணி CSIR ரோட்டில் உள்ள அரசு நீர்வளத்துறை அலுவலகத்தில் தலைமை பொறியாளராக பணியாற்றி வருபவர் அசோகன்(56). இவர் கடந்த செப்.23 ஆம் தேதி பணியில் இருந்த போது அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் எனக் கூறி ஒருவர் வந்துள்ளார்.
தங்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு 10க்கும் மேற்பட்ட புகார் வந்துள்ளன. அதை சரி செய்வதற்கு 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று நேரடியாக கேட்டுள்ளார். இல்லையென்றால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளார்.
பயந்து போன அசோகன், வாகன ஓட்டுநர் முகுந்தனை அழைத்து அவசரமாக வெளியே செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து நீர்வளத்துறை அதிகாரி அசோகன், ஓட்டுநர் முகுந்தன் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் என கூறிய நபர் என 3 பேரும் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை அருகே உள்ள அடையார் ஆனந்த பவனுக்கு சென்று டீ குடித்துள்ளனர்.
அங்கிருந்து சைதாப்பேட்டையில் உள்ள அசோகன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அசோகன் தனது வீட்டில் பீரோவில் மனைவி ஏதாவது பணம் வைத்திருக்கிறாரா என பார்த்தபோது பணம் எதுவும் இல்லை.
இதையடுத்து சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள IOB வங்கி லாக்கரில் பணம் இருக்கிறது. அங்கு சென்று பணத்தை எடுத்துத்தருவதாக கூறி வீட்டில் இருந்த லாக்கர் சாவியை எடுத்துக் கொண்டு அசோகன் சென்றார்.
ஆனால், அசோகனின் மனைவி அருள்மொழிக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் எனக் கூறிய நபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கணவரின் உடன்பிறந்த சகோதரர் கடலூர் மாவட்டத்தில் பணியாற்றும் டிஎஸ்பி அண்ணாதுரைக்கு நடந்த சம்பவம் குறித்து போனில் விளக்கி உள்ளார் அருள்மொழி.
அவர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தனியாக யாரும் வர மாட்டார்கள். இருந்தாலும் விசாரித்து விட்டு வருகிறேன் எனக் கூறி சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் கேட்டுள்ளார். அதுபோல் யாரும் விசாரணைக்கு செல்லவில்லை என லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பதிலளித்துள்ளனர்.
இதையடுத்து அண்ணாதுரை, அருள் மொழியை தொடர்பு கொண்டு மோசடி நபராக இருக்கலாம். வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு லாக்கரை திறக்க அனுமதிக்க வேண்டாம் என தெரிவித்து விடு என கூறியுள்ளார்.
அவரது அறிவுரைப்படி அருள்மொழி சிந்தாதிரிப்பேட்டை ஐஓபி வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு தனக்கும் கணவருக்கும் குடும்ப பிரச்சனை இருப்பதாக கூறி லாக்கரை திறக்க அனுமதிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
அசோகன் வங்கிக்கு சென்றபோது மேலாளர் லாக்கரை திறக்க அனுமதிக்கவில்லை. இதையடுத்து அசோகன், ஓட்டுநர் முகுந்தன், லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் என கூறிய நபர் மூன்று பேரும் காரில் புறப்பட்டனர்.
நுங்கம்பாக்கம் ஆயக்கார்பவன் அருகே அந்த மர்ம நபர் இறங்கி உள்ளார். நாளை வந்து பணத்தை பெற்றுக் கொள்கிறேன் என கூறிவிட்டு சென்று உள்ளார்.
இந்நிலையில், அசோகன் மனைவியை தொடர்பு கொண்டு விசாரித்த போது வந்த நபர் மோசடி பேர்வழி என தெரியவந்தது. இதனால், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் எனக் கூறி மோசடியில் ஈடுபட முயன்றவரின் அங்க அடையாளங்களை குறிப்பிட்டு தரமணி காவல் நிலையத்தில் நீர்வளத் துறை அதிகாரி அசோகன் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபரை தேடி வருகின்றனர்.
இதேபோன்று சென்னையில் மற்றொரு சம்பவமும் அரங்கேறியுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலகத்தில் செயல் பொறியாளராக பணியாற்றி வருபவர் ராஜன்பாபு.
இவரிடம் கடந்த (செப்.22) ஆம் தேதி அலுவலகத்திற்கு வந்த நபர் தான் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரி என அறிமுகமாகியுள்ளார். அதற்கு ராஜன்பாபு அவரது அடையாள அட்டையை கேட்டபோது, உங்கள் வீட்டில் முன் பத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நின்று கொண்டிருக்கிறார்கள் அங்கு வந்து காட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கோயம்பேடு சீனிவாசா நகரில் உள்ள அவரது வீட்டிற்க்கு வாகனத்தில் அழைத்து சென்று உள்ளார். அவர்கள் வீட்டுக்கு சென்ற போது வீட்டில் எந்த ஒரு அதிகாரியும் இல்லாததால், அனைவரும் கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்திற்கு சென்றுள்ளதாக கூறிய அந்த நபர் சமாளித்துள்ளார்.
இதையடுத்து, வீட்டில் சோதனை செய்து பீரோவில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்திற்கு மீண்டும் சென்றுள்ளார்கள். அப்போது செல்லும் வழியில் அந்த நபர் காரில் இருந்து இறங்கி தன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வருவதாக ராஜன்பாபுவிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர், ராஜன்பாபு அலுவலகம் சென்று பார்த்தபோது அந்த நபர் வெகு நேரம் ஆகியும் வரவில்லை இதனால் தான் ஏமாற்றப்பட்டதை ராஜன்பாபு அறிந்துள்ளார். பின்னர் இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் அளித்த புகார் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், நீர் வளத்துறை அதிகாரி அசோகன், செயற்பொறியாளர் ராஜன்பாபு ஆகியோரிடம் கைவரிசை காட்டிய நபர் ஒரே நபராக இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாஜக பிரமுகர் ஆம்னி பேருந்தை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீச்சு; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்