சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்டச்செயலாளர் கூட்டத்திற்குப் பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "பொன்விழா ஆண்டை நிறைவு செய்யும் வகையில் கழக நிர்வாகிகளோடு கருத்துகள் கேட்கப்பட்டு, அதற்கேற்றவாறு நடைபெற அறிவுறுத்துதல் வழங்கப்பட்டது. திமுக குடும்ப ஆதிக்க கொண்ட இயக்கம்; அந்த நெல்லிக்காய் மூட்டை எப்போது வேண்டுமானாலும் சிதறலாம்.
முரசொலி செல்வத்திற்கு என்ன பொறுப்பு இருக்கிறது. அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார்கள். இவர்கள் எப்படிப்பட்ட பகுத்தறிவாளிகள், கேட்டால் பெரியார் வழி வந்தவர்கள் என்றும் அண்ணா வழி வந்தவர்கள் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். மூத்த நிர்வாகிகள் கட்சியில் மதிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிலிருந்து வெளியில் சென்றுள்ளார்.
மூத்த நிர்வாகிகள் யாருக்காவது துணைப்பொதுச்செயலாளர் பதவியை கொடுத்திருக்கலாம். ஆனால், அதை தனது அருமை தங்கைக்கு கொடுத்துள்ளார், ஸ்டாலின். தம்பி உடையான் படைக்கு அஞ்சான், கழகம் ஒரு குடும்பம் என்று அறிஞர் அண்ணா சொல்வதைப் போல, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கட்சியை மாற்றியுள்ளனர்.
ஆனால், குடும்பம் கழகம் என்று சொன்னால் அது திமுக தான். ஸ்டாலின் மொழியில் தங்கை உடையான் படைக்கு அஞ்சான் என்று மாறி உள்ளது. பொதுக்குழுவில் அடிக்கடி சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்று வார்த்தையை பயன்படுத்தியவர் கட்சியில் சர்வாதிகாரியாக நடந்து கொள்ளவில்லை.
முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலினுக்கு ஜெயலலிதா போல ஒரு விழுக்காடு துணிச்சல், தைரியம் உள்ளதா?. அவரால் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிந்ததா?. அதிமுகவில் இது போன்று பேசினால் பொறுப்பில் நீடிக்க முடியுமா?. முதலமைச்சர், தலைவருக்கு உள்ள மரியாதை பொதுக்குழுவில் தெரிந்துவிட்டது.
உலக நடப்பு, தமிழ்நாட்டில் நடப்பது எதுவும் முதலமைச்சருக்குத் தெரியவில்லை. பொம்மை முதலமைச்சர் போல செயல்பட்டு வருகிறார். சமுத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் போவதுபோல்தான், மைத்ரேயன் ஓ. பன்னீர்செல்வம் அணிக்குச் சென்றது. முதலமைச்சர் பதவியை துரைமுருகனுக்கு கொடுத்துவிட்டு மு.க.ஸ்டாலின் ஓய்வெடுக்கலாம்.
முதலமைச்சர் பேசும்போது ஒரு அமைச்சர் அமர்ந்து சிரித்துக்கொண்டிருக்கிறார் யார் அவர்...? பொன்முடி... நீங்க என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்று ஏளனமாக சிரிக்கிறார்.
எம்.பி டி.ஆர். பாலு, வரிந்து கட்டிக்கொண்டு சென்று செருப்பு எடுத்து வா என்று சொல்லி, மேடையில் செருப்பை போடுகிறார். ஒரு முதலமைச்சருக்கு கட்சியினுடைய தலைவருக்கு பொதுக்குழுவில் எந்த அளவிற்கு மரியாதை இருக்கிறது என்பது இதை விட சொல்ல முடியாது.
சோசியல் மீடியாக்களில் அவரை கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் அவருக்கு தெரிகிறதா இல்லையா. நாட்டு நடப்பு என்ன என்பது தெரியாமல் இருக்கிறார்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து ஸ்டாலின் ஆலோசனை