கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வடிவேலு. இவரது மகள் அஸ்வதி (11). கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். கோடை விடுமுறையைக் கொண்டாடுவதற்காக சிறுமி அஸ்வதி தனது பாட்டியுடன் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் வெளியே சென்றுள்ளனர். சிறுமி அஸ்வதி மட்டுமே வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமி அஸ்வதியை கவனித்துக் கொள்ள அவரது சித்தப்பா ஈஸ்வரன் அலுவலக வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். ஈஸ்வரன் வெகு நேரம் கதவைத் தட்டியும் சிறுமி அஸ்வதி கதவைத் திறக்கவில்லை. அச்சமடைந்த ஈஸ்வரன், அக்கம்பக்கத்தினரின் உதவியோடு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அப்போது, சிறுமி அஸ்வதி தொட்டில் கட்டப்பட்ட சேலையில் கழுத்து இறுக்கப்பட்டு அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சிறுமியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், சிறுமி அஸ்வதி தொட்டிலில் விளையாடும்போது தொட்டில் சேலை கழுத்தை இறுக்கி மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.