தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட இக்குழுவில், 24 பேர் இடம்பெறுவர். இந்த உயர்மட்டக் குழுவுக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவரான சி.ரங்கராஜனை தலைவராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழுவில் பல்துறை வல்லுநர்கள், பொருளாதார நிபுணர்கள் என 14 பேரும், மாநில அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழு தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆய்வு செய்து, அடுத்த 3 மாதங்களில் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யும்.
கரோனா பெருந்தொற்றால் தமிழ்நாடு பொருளாதாரத்தில் உள்ள பல்வேறு துறைகளில், உடனடியாக மற்றும் நடுத்தர காலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்தல். ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் கூடுதல் செலவினங்கள் முன் தடுப்பு நடவடிக்கைகள், மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த குறுகிய காலத்திலும், நடுத்தர காலத்திலும் இருக்கும் வாய்ப்புகள், அச்சுறுத்தல்களை ஆய்வறிந்து கூறுதல்.
மேலும் பொருளதார வளர்ச்சிக்கான முக்கியமான துறைகளை கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீட்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தேவையான உதவிகளைக் கண்டறிதல். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானதாகக் கருதப்படும் துறைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ஆதரவு அளிக்கவும், தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியதையும் அறிவுறுத்துதல், கரோனா வைரஸால் தமிழ்நாடு அரசின் நிதிச்சூழலில் ஏற்பட்ட பாதிப்பு, நிதிச்சூழலை மேம்படுத்தும் வழிகள் கண்டறிதல், வரி விதிப்பை உயர்த்துதல், உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம், முன்னுரிமை அளித்துச் செலவழித்தல், வருவாயைப் பெருக்குதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும்.
அதேபோன்று மாநில அரசுக்கு இருக்கு நிதிப் பிரச்சினைகள், பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் மத்திய அரசுடன் இணைந்து, மாநில அரசு எடுக்க வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதோடு, கட்டுமானத்துறை, சிறு தொழில்கள், சிறு வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் நிதி, நிதியுதவி அளித்தலைக் கண்டறிந்து, ஆய்வறிக்கையைத் தயார் செய்து தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்யும்.