சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் ஒரு ஆண்டிற்கு 9 மாணவர்கள், 9 மாணவிகள் என 413 வட்டங்களில் இருந்து 7,434 மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப்போட்டிகள், ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து, பள்ளி மாணவர்களிடம் ஆர்வத்தைத்தூண்டும் வகையில் மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக அரசுப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டியை தென்காசியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இந்தப்போட்டியில் 39ஆயிரத்து 26 பள்ளிகளில் இருந்து 11 லட்சத்து 51ஆயிரத்து 800 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்கள் 413 வட்டார அளவிலான சதுரங்கப்போட்டியில் 84ஆயிரத்து 352 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு 38 வருவாய் மாவட்ட அளவில் செஸ் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தப் போட்டியினை சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 10 வட்டாரங்களில் 90 மாணவர்கள், 90 மாணவிகள் என 180 பேர் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 7,434 மாணவர்கள் இந்தப்போட்டியில் பங்கேற்றுள்ளனர். வருவாய் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
இதையும் படிங்க: கோவையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் - உற்சாக வரவேற்பு!