சென்னை: 1995 ஏப்ரல் 14 அன்று முஸ்தபா ரசாதிக் என்பவர் சக்திவாய்ந்த வெடிகுண்டு உள்ள பையை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் வைத்தார். குறிப்பிட்ட நேரத்தில் குண்டு வெடிக்காததால் மீண்டும் சென்று வெடிகுண்டு வைத்த பையை எடுக்கும்போது அலுவலகத்தில் உள்ளவர்கள் முஸ்தபா ரசாதிக்கைப் பிடிக்க முயற்சித்தனர்.
அப்போது முஸ்தபா ரசாதிக் அங்குள்ளவர்களைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும், இதனால் அனைவரும் சிதறி ஓடியதாகவும் கூறப்படுகிறது. உடனே முஸ்தபா ரசாதிக் வெடிகுண்டை அப்போதே வெடிக்கச் செய்தார். இதில் அவர் உடல் சிதறி இறந்துபோனார்.
தேடப்படும் குற்றவாளி அபுபக்கர் சித்திக்
மேலும் இந்து முன்னணி அலுவலகமும் இடிந்து விழுந்தது. உள்ளே இருந்த இந்து முன்னணிப் பிரமுகர் பைபிள் சண்முகமும் இறந்துபோனார். மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை முதலில் சிந்தாதிரிப்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
பின்னர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்திய நிலையில் அதன்பிறகு காவல் துறைத் தலைவரின் உத்தரவுப்படி சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்தனர். இதில் ஐந்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது.
இதில் முஸ்தபா ரசாதிக் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். அபுபக்கர் சித்திக் என்பவர் தலைமறைவாகிவிட்டார். இதுவரை காவல் துறையினரால் பிடிக்க முடியாததால் அவர் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
இதில் காஜா நிஜாமுதீன் (மற்ற பெயர்கள்: உமர், குட்டியப்பா), ஜாகிர் உசேன் (மற்ற பெயர்கள்: இஸ்மாயில், ஹனஸ், உஸ்மான் அலி), ராஜா உசேன் என்ற சைபுல்லா ஆகிய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் மூன்று பேருக்கும் விடுதலை என அறிவித்தார்.
அரசுத் தரப்பில் வழக்கறிஞர் விஜயராஜ் முன்னிலையாகி வாதாடினார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் 75 சாட்சிகள், 177 ஆவணங்கள், 39 சான்று பொருள்கள் குறியீடுசெய்யப்பட்டன. காலை முதல் பரபரப்புடன் காணப்பட்ட நீதிமன்றம் வளாகத்தைச் சுற்றிலும் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மற்றொரு வழக்கு
2012ஆம் ஆண்டு பல்லாவரம் - பம்மல் சாலை சந்திப்புப் பகுதியில் உதயாஸ் என்பவரைப் பிடித்து காவல் துறையினர் விசாரித்தபோது வெடிகுண்டுகள் வைத்திருந்தார். மேலும் இவர்கள் வெடிகுண்டுகளை வெடிக்கவைப்பது போன்ற காணொலி காட்சிகள் சிக்கின. இதில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இதில் உதயாஸ் என்ற உதயசங்கர், சேரா என்ற சுரேஷ்குமார், கிருஷ்ணமூர்த்தி என்ற மூர்த்தி, மகேஸ்வரன் என்ற கோபி ஆகிய நான்கு பேரையும் விடுதலை செய்து நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் இரண்டு பேர் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரூரில் மர்ம சத்தம்: பொதுமக்கள் பீதி