சென்னை: மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்கள், தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், சென்னை அருகிலுள்ள காரனோடை சுங்கச்சாவடி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, டாட்டா ட்ரக் ஒன்றை சோதனை செய்தபோது மரப்பெட்டியில் எட்டு டீ பாக்கெட்டுகளில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள எட்டு கிலோ போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டு சென்னைக்கு கடத்திவரப்பட்டது தெரியவந்தது.
டாடா கார் ஓட்டுநர் ஜெகதீஸ்வரன் என்பவரை மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சென்னையைச் சேர்ந்த மாரியப்பன், ரமேஷ் ஆகிய இருவர் இந்தோ மியான்மர் எல்லைப் பகுதியில் இருந்து கிறிஸ்டல் வடிவிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருளை சென்னைக்கு கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஓட்டுநர் ஜெகதீஸ்வரன் தகவலின்அடிப்படையில், மேற்கூரிய இருவரும் தேநீர் கடையில் வைத்து கைதுசெய்யப்பட்டனர். மியான்மரில் இருந்து மணிப்பூர் கடத்தல் கும்பல் உதவியுடன் இந்தியாவிற்குள் போதைப் பொருள்களை கொண்டுவந்து, இந்த போதைப்பொருள்களை சிறு சிறு பாக்கெட்டுகளாக மாற்றி கல்லூரிகள், சொகுசு பார்ட்டிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விற்பனை செய்ய திட்டமிட்டதாக கைது செய்யப்பட்ட மாரியப்பன், ரமேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று ஏற்கெனவே பலமுறை போதைப் பொருள்களை கடத்திவந்ததாக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்களிடம் அவர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் போதைப்பொருள் கும்பலைக் கூண்டோடு பிடிக்க ஸ்கெட்ச்!