சென்னை: மத்திய அரசை கண்டித்து அகில இந்திய தொழிற்சங்கம் சார்பாக இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய தொழிற்சங்கங்கள் மார்ச் 28,29 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. போராட்டத்தின் அடுத்தகட்டம் குறித்து அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பாக சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களை தொமுச பொருளாளர் நடராசன் சந்தித்து பேசினார்.அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் மத்திய அரசை கண்டித்து வெற்றிகரமாக முதல் நாள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
60% பேருந்துகள் இயக்க முடிவு: இருந்தாலும் தற்போது மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் பணிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், போராட்டத்தின் வடிவை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் நாளை (மார்ச் 29) 60% வரை பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது உள்ளோம்.
எனவே, நாளை (மார்ச் 29) நடைபெற உள்ள போராட்டத்தில் முன்னணி நிர்வாகிகள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடவும் மற்ற தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்கவும் முடிவு செய்துள்ளோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொடங்கியது பொது வேலைநிறுத்தப் போராட்டம்: அவதியில் மக்கள்