மருத்துவர் உடலை வேலாங்காடு இடுகாட்டில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், வாகனம் மற்றும் அரசு ஊழியர்களைத் தாக்கியும் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் 22 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 17 வயது சிறுவன் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 5 பேர் பிணை கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் 5ஆவதாக சேர்க்கப்பட்டுள்ள ஆனந்தராஜ், 6ஆவதாக சேர்க்கப்பட்டுள்ள சோமசுந்தரம், 14ஆவதாக சேர்க்கப்பட்டுள்ள குமார், 20ஆவதாக சேர்க்கப்பட்டுள்ள மணிகண்டன், 21ஆவதாக சேர்க்கப்பட்டுள்ள காதர் மொய்தீன் ஆகியோர் பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஐந்து பேரும் கூட்டாகச் சேர்ந்து தாக்கல் செய்துள்ள மனுவில், 'சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் கலையரசன் தங்களுக்கு எதிராகத் தவறாகப் புகார் அளித்திருப்பதாகவும், அதில் காவல் துறை வழக்குப் பதிவு செய்திருப்பதும் தவறு என்றும், அந்த சம்பவத்துக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை' என்றும் குறிப்பிட்டுள்ளனர். வீட்டில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த தங்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறை, திடீரென கைது செய்திருப்பதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த மனுவை வீடியோ கான்ஃபெரன்சிங் மூலமாக விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார், விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதால் 5 பேரின் பிணை மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.