சென்னை: கரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வராத நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதனையொட்டி இரண்டு நாட்களுக்கு அனைத்து கடைகளும் இரவு 9 மணிவரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் (மே 22), நாளையும் (மே 23) வெளி மாவட்ட பேருந்து போக்குவரத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இரு தினங்களில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு 1,500 பேருந்துகளும், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 3,000 பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டால் அதற்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை சென்னையில் இருந்து முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் கடைசி பேருந்துகளில் விவரம்:
சென்னையிலிருந்து மார்த்தாண்டத்திற்கு மாலை 6 மணிக்கும், நாகர்கோவில், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இரவு 7 மணிக்கும், செங்கோட்டைக்கு இரவு 7.30 மணிக்கும், திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு இரவு 8 மணிக்கும், மதுரைக்கு இரவு 11.30 மணிக்கும், திருச்சிக்கு இரவு 11.45 மணிக்கும் கடைசிப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு: இதற்கெல்லாம் அனுமதி இல்லை