தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான பபாசி சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சேப்பாக்கத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய பபாசியின் தலைவர் சண்முகம், ” 43ஆவது ’சென்னை புத்தகக் கண்காட்சி 2020’ நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 9ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 13 நாட்கள் நடைபெறவுள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய புத்தகக் காட்சிகளில் ஒன்றான சென்னை புத்தகக் கண்காட்சிக்கு தமிழகம் மட்டுமல்லாமல், நாட்டின் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான வாசகர்கள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர். இக்கண்காட்சியில், 700க்கும் மேற்பட்ட அரங்குகளில், சுமார் ஒரு கோடி புத்தகங்கள், பல தலைப்புகளில் இடம்பெறவுள்ளன. கண்காட்சிக்கு வருபவர்களுக்கு நூல் விலையில் 10% தள்ளுபடி அளிக்கப்படுகிறது. மேலும், மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி நிறுவனங்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படவுள்ளன. 13 நாட்களில் 8 நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளதால், 15 லட்சத்திற்கும் அதிகமானோர் இக்கண்காட்சியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
தமிழ்மொழியின் பெருமையை பறைசாற்றும் வகையில் ’ கீழடி - ஈரடி ‘ என்ற சிறப்பு அரங்கம் அமைக்கப்படவுள்ளது. அதுமட்டுமல்லாமல் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் பல்வேறு துறை அறிஞர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகள் 13 நாட்களும் நடக்க இருக்கின்றன. பல்வேறு மொழிகளில் திருக்குறளை மொழிப்பெயர்த்து வந்த பதிப்புகளும் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளன. சுவையான உணவு, சரியான விலையில் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்களிடம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க ’சென்னை வாசிக்கிறது‘ என்ற புதுமையான முயற்சியை மேற்கொள்ளவுள்ளோம். இந்நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியரைச் சந்தித்த கடம்பூர் ராஜூ!