சென்னை: கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த கருணாநிதி மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் உள்ளிட்டோர் இணைந்து சென்னை வடபழனி மன்னார் தெருவில் ஓசோன் கேபிடல் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். மேலும், கோயம்பேடு மார்க்கெட்டில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை 3 மணியளவில் பைனான்ஸ் நிறுவனத்தில் திடீரென 7 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்துள்ளனர். பின் அங்கு இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி லாக்கரில் இருந்த 30 லட்ச ரூபாயை பணத்தை கொள்ளையடித்துள்ளனர். அப்போது நிறுவன உரிமையாளர் சரவணன் சத்தம் கேட்டு விஷயமறிந்து அலுவலகத்தை பூட்டி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து 30லட்சம் பணத்தை கொள்ளையடித்த பின்பு பூட்டிய கதவை உடைத்து தப்பிக்க சென்ற போது கடை ஊழியரான நவீன் என்பவர் கொள்ளையர்களை பிடிக்க சென்ற போது கத்தியால் தாக்கப்பட்டார்.
பின்னர் நிறுவன முதலாளிகளில் ஒருவரான சரவணன் மற்றும் ஊழியர்கள் சாதுர்யமாக செயல்பட்டு கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் கொள்ளையர்களை துரத்தியுள்ளனர். அப்பொழுது ஒரு கொள்ளையர் வந்த இருசக்கர வாகனம் திருநகர் 1வது தெருவில் விபத்துக்குள்ளானது. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் தப்பியோட பின்னால் அமர்ந்து இருந்த நபரை மடக்கி பிடித்து அவனை வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சரவணன் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீசார் வழக்குபதிவு செய்து பிடிப்பட்ட கொள்ளையனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிப்பட்ட நபர் விருகம்பாக்கத்தை சேர்ந்த சையது ரியாஸ்(22) என்பது தெரியவந்தது. மேலும், இஸ்மாயில், பரத், கிஷோர், ஜானி, தமிழ், மொட்டை ஆகியோருடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது
தப்பியோடிய மற்ற நபர்களை சிசிடிவி காட்சி மூலம கைது செய்யும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அரும்பாக்கத்தில் வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், வடபழனியில் நிதி நிறுவனத்தில் 30 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காவடி தூக்கவா டெல்லி போகிறேன்...ஸ்டாலின்