சென்னை: செம்மரக் கட்டைகளில் விநாயகர் சிலை, சிவன் சிலை ஆகியவற்றை செய்து வெளிநாட்டுக்கு கடத்துவதற்காக தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த மூன்று டன் எடையுள்ள செம்மரக் கட்டைகளை நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
வன நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை
சென்னை மணலியில் உள்ள தனியார் குடோன் ஒன்றில் செம்மரக்கட்டைகளைப் பதுக்கியுள்ளதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வன நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் அதிரடியாக அந்த குடோனில் சோதனை மேற்கொண்டனர்.
தெய்வங்களின் மரச்சிற்பங்கள்
முதற்கட்ட சோதனையில், கிட்டத்தட்ட மூன்று டன் செம்மரக் கட்டைகளை அந்த குடோனில் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டு பிடித்துள்ளனர். மேலும், செம்மரக்கட்டைகளில் விநாயகர் சிலை, அய்யனார் பூதம், குதிரை, யாழி, சிவன் சிலை உள்ளிட்ட பல தெய்வங்களில் சிலைகளை செம்மரக்கட்டைகளில் உருவாக்கி வைத்திருப்பதையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.
உரிமையாளர்கள் தலைமறைவு
செம்மரக்கட்டைகளில் செய்யப்பட்ட சிலைகளை, வெளிநாட்டுக்கு கடத்த இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. செம்மரக்கட்டைகளைப் பதுக்கி வைத்திருந்த குடோனின், உரிமையாளர்கள் மண்ணடியைச் சேர்ந்த முகமது மற்றும் சையது ஆகிய இருவர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் தலைமறைவாகி உள்ளனர். தொடர்ந்து வன நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் அந்த குடோனில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச கடத்தல்
அரியவகை தாவரப்பட்டியலிலுள்ள, செம்மரக்கட்டைகளை விற்பதும் கடத்துவதும் வன சட்டத்தின்படி குற்றமாகும். வெளிநாடுகளில் செம்மரக்கட்டைகளை கலைப்பொருளாகவும், அதிர்ஷ்டம் கிடைக்கக்கூடிய மரம் என்றும் மருத்துவ குணம் உடையது என்றும் கூறி, சில நாட்டு மக்களிடம் உள்ள நம்பிக்கையை பயன்படுத்தி சர்வதேச கடத்தல் கும்பல் செம்மரக்கட்டைகளை கடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நெருங்கும் தீபாவளி - சோகத்தில் பட்டாசு வியாபாரிகள்