சென்னையிலிருந்து ஹைதராபாத் வழியாக சார்ஜா செல்லும் ஏா்இந்தியா விமானம் சென்னை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதை தடுப்பு பிரிவு (NCB) காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து மத்திய போதை தடுப்பு பிரிவு காவலர்கள் விரைந்து வந்து, அந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகளைச் சோதனையிட்டனர். அப்போது சென்னை மயிலாப்பூரைச் சோ்ந்த கற்பகம் என்ற பெண் பயணியின் மீது காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர் வைத்திருந்த தெர்மாகோல் பெட்டியை திறந்து பாா்த்து சோதனையிட்டபோது, அதனுள் பதப்படுத்தப்பட்ட உயா்ரக கஞ்சா இருந்ததைக் கண்டுப்பிடித்தனர். இதையடுத்து, மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்புடைய 3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, அந்தப் பயணியை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தியதில், ராமநாதபுரத்தைச் சோ்ந்த மொய்தீன் என்பவர் தான் இந்த பார்சலை தன்னிடம் தந்து அனுப்பினார் என்று பயணி கற்பகம் கூறினாா். இதையடுத்து விமானநிலைய வளாகத்தில் பதுங்கியிருந்த மொய்தீனையும் போதை தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து இருவரையும் சென்னையில் உள்ள மத்திய போதை தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: உள்நாட்டு விமானங்களில் உணவு அளிக்க தடை!