சென்னை: இந்தியா முழுவதும் உள்ள பெரு நகரங்களுக்கு விமான போக்குவரத்து சேவையை கூடுதலாக விரிவு செய்யும் திட்டம் குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், 'நாடு முழுவதும் உள்ள முக்கிய பெருநகரங்களுக்கு 2ஆவது விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. டெல்லிக்கு அருகே டெல்லி ஜிவாரியில் ரூ.38,000 கோடி செலவில் இரண்டாவது விமான நிலையமும், அதேபோல் நவி மும்பையில் ரூ.17,000 கோடி செலவில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்நாடு அரசின் பரிந்துரை: இந்த நிலையில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 2ஆவது விமான நிலையத்திற்காக மாநில அரசு பரிந்துரைத்த 4 இடங்களில் பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டு தளங்களை இந்திய விமான நிலைய ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளோம். இது குறித்து மாநில அரசின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
நான்கு இடங்களுக்குள் பல்வேறு அம்சங்களைக் கவனமாக ஆலோசித்த பிறகு, இந்த இரண்டு இடங்களையும் இந்திய விமான நிலைய ஆணையம் பட்டியலிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டு இடங்களிலும் இருந்து பல தரப்பு ஆய்வுகளை மேற்கொண்டு இந்திய விமான நிலைய ஆணையம் முடிவுகளை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விமான நிலைய பணிகள் அதிவேகத்தில் நடைபெற்றாலும், விமான நிலையம் பணிகள் நிறைவாக குறைந்தது 5 ஆண்டுகள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'அதிமுக அறிமுகப்படுத்திய தொழில் திட்டங்களில் மு.க. ஸ்டாலின் கையெழுத்திடுகிறார்'- எம்.சி. சம்பத்!