சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆணையர் ஜெ. குமரகுருபரன் தலைமையில் திருக்கோயில்களில் பணிபுரியும் வட்டாட்சியர் மற்றும் அனைத்து உதவி ஆணையர் ஆலோசனைக் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அறநிறுவனங்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்கள் எழுப்பப்படும் கேட்பினை முறையாக வசூல் செய்யவும், அதில் ஒளிவு மறைவு அற்ற வகையில் அமையும் வண்ணம் கடந்தாண்டு அக்.10ஆம் தேதியன்று, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, திருக்கோயில் கேட்பு வசூல் நிலுவை பதிவேடு விவரம் கணினிமயமாக்கப்பட்டுள்ளதைத் தொடங்கிவைத்தார்.
இணைய வசதி
இதன் மூலம் அறநிறுவனங்களின் அசையாச்சொத்துக்களுக்கு குத்தகைதாரர் மற்றும் வாடகைதாரர்களால் செலுத்த வேண்டிய குத்தகை, வாடகை தொகையினை இணைய வழியில் செலுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அறநிறுவனங்களிலும் அச்சடித்த ரசீது வழங்கும் முறை அக்டோபர் 31, 2021 அன்று ரத்து செய்யப்பட்டுள்ளதால் அனைத்து அறநிறுவனங்களின் கேட்பு வசூல் நிலுவை குறித்த விவரங்களை விடுதல் இல்லாமல் கணினியில் முழுமையாக பதிவேற்றம் செய்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நிலம் அளவிடும் பணிகள்
இதுவரையில், திருக்கோயிலுக்குச் சொந்தமான 27,000 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணிகள் முடிவுற்றன. நிலக்கல் ஊன்றும் பணிகள் மற்றும் வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள நிலங்களை 150 நில அளவையர்கள் மூலம் 56 ரோவர் கருவிகளைக் கொண்டு அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இப்பணிகளை விரைந்து முடிக்க வட்டாட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் ஈட்ட நடவடிக்கை
இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள அற நிறுவனங்களுக்குச் சொந்தமான மொத்தச் சொத்துக்கள் 3 லட்சத்து 65 ஆயிரத்து 667 இனங்கள் உள்ளன. அதில் 98 ஆயிரத்து 596 இனங்கள், குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டு வருமானம் ஈட்டப்பட்டு வருகிறது. மீதமுள்ள 2,67,071 இனங்கள் எவ்வித வருவாய் ஈட்டாமல் உள்ளது.
வருவாய் ஈட்டப்படாத இனங்களைத் திருக்கோயில் வாரியாக கண்டறிந்து அவற்றைக் குத்தகை மற்றும் வாடகைக்கு விடப்பட்டு, திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டிடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு முடிக்கப்பட வேண்டுமென அனைத்து சார் நிலை அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
திருக்கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களுக்குப் பட்டா மற்றும் சிட்டா வாங்குவதற்கு உண்டான பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர்களுடன் இணைந்து இப்பணிகளை முடிக்க வட்டாட்சியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
நில மதிப்பு நிர்ணயம்
நியாய வாடகை நிர்ணயம் செய்ய வேண்டிய புலங்களின் அரசு வழிகாட்டி மதிப்பினை சம்பந்தப்பட்ட சார் பதிவாளர்களிடமிருந்து எழுத்துப் பூர்வமாகப் பெற்றுக் கொள்வதுடன் அவற்றை இணைய தளத்திலும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
இதனடிப்படையிலேயே, அப்புலங்களுக்கான இறுதி நில மதிப்பு நிர்ணயம் செய்யப்படும். இதில், இரண்டிற்கும் ஏதேனும் வேறுபாடுகள் இருப்பின் மாவட்ட பதிவாளரிடம் சரியான மதிப்பினை பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராகுலின் எழுச்சியூட்டும் உரைக்கு தமிழர்கள் சார்பாக நன்றி... முதலமைச்சர்...