சென்னை: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பெண்ணின் வயிற்றில் இருந்த 22 கிலோ சினைப்பை கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
சென்னை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் திருப்பத்தூரைச் சேர்ந்த 45 வயதான தனவதி பாய் என்ற பெண் கடந்த ஓராண்டாக வயிறு வலியால் மிகவும் சிரப்பப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், வயிறு வலி தாங்காமல், எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். மருத்துவர்கள் பரிசோதிக்கையில், அவரின் வயிற்றில் சினைப்பைக் கட்டி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவர்கள் பெண்ணின் வயிற்றிலிருந்த சினைப்பைக் கட்டியை அகற்றுவதற்கான பரிசோதனைகளை செய்துள்ளனர்.
பின்னர், ஜூலை 29ஆம் தேதி காலை எழும்பூர் அரசு மருத்துவமனையின் மகளிரியல் பிரிவு குழுவால், 45 வயது பெண்ணின் சினைப்பையில் ஏற்பட்ட மிகப்பெரிய கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
22 கிலோ கட்டி நீக்கம்
22 கிலோ சினைப்பை கட்டியை, நிலைய இயக்குநர் விஜயா, ஆனந்தி வழிகாட்டுதலுடன் புற்றுநோய் அறுவை மருத்துவர் கவிதா சுகுமார், சுஜாதா மயக்க மருத்துவர்கள் குழுவால், சீரிய அறுவை சிகிச்சை நடைபெற்றது.
சிகிச்சை முடிந்த பின்னர் அந்தக் கட்டியை பரிசோதனை செய்து பார்த்தபோது, புற்றுநோய்க் கட்டி என கண்டறியப்பட்டது.
அந்தக் கட்டியை அகற்றுவதற்கு முன்னர் பெண்ணின் உடல் எடை 62 கிலோ என இருந்தது. தொடர்ந்து புற்றுநோய் செல்கள் உடலின் வேறு பகுதிகளுக்கு செல்லாத வகையில் சிகிச்சை அளிக்கப்படும் எனவும் இயக்குநர் விஜயா தெரிவித்தார்.
இந்த மருத்துவமனையில் பல அறுவை சிகிச்சைகளை மகளிரியலும், புற்றுநோய்ப் பிரிவும் சிறப்பாக மருத்துவ சேவை ஆற்றி வருகிறது.
இதையும் படிங்க: 'மதுரையில் வேலைக்கு சாதி, உட்பிரிவு கேட்கும் தனியார் மருத்துவமனை!'