திருவள்ளூர்: பாக்கம் ஊராட்சி சேவாலயா பள்ளியில் நேற்று (பிப்ரவரி 27) போலியோ சொட்டு மருந்து போடும் நிகழ்ச்சியை ரிப்பன் வெட்டி குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து போட்டு மா சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
மேலும் சேவாலயா பள்ளி சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மா. சுப்பிரணியன், 2000 வளரிளம் பெண் குழந்தைகளுக்கான சோப்பு, சானிடரி நாப்கின், wipes, பேரீச்சை, பாதாம் , முந்திரி, உலர் திராட்சை, வால்நட் உள்ளிட்டவை அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கியதுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் மா. சுப்பிரமணியன் பேசுகையில், "போலியோ ஒழிப்பதற்கு சுழற்சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் காரணம், ஒரே நாளில் 155 மருத்துவ முகாம்களை நடத்தி சாதனை படைத்தது திமுக அரசு. முந்தைய அரசு சரியாகச் செயல்பட்டிருந்தால் தடுப்பூசியை விரைவாக மக்களுக்குச் செலுத்தி கரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்க முடியும். ஆனால் தற்போதைய அரசு 9 கோடியே 94 லட்சம் கரோனா தடுப்பூசிகளைப் போட்டு சாதனை படைத்துள்ளது.
மேலும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்குத் தடுப்பூசி செலுத்தியதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. மேலும் பெண்களுக்கு முதன்முதலில் சானிடரி நாப்கின் கொடுத்தது திமுக அரசு. மேலும் பெண்களுக்குத் தேவையான பல திட்டங்களைத் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த உள்ளது" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணசாமி, சேவாலயா நிறுவனர் முரளி, வருவாய்க் கோட்டாட்சியர் ரமேஷ், திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார், திமுக ஒன்றியச் செயலாளர் புஜ்ஜி ராமகிருஷ்ணன், புலியூர் ஊராட்சி மன்றத் தலைவர் பக்தவச்சலு, ஒன்றிய உறுப்பினர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:ஸ்டாலினின் 'உங்களில் ஒருவன்' நூலை வெளியிடுகிறார் ராகுல்!