சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (நவ.8) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வடகிழக்குப் பருவமழையால் பாதிப்பு ஏற்படும் மாவட்டங்களைக் கண்காணிப்பதற்கு ஐஏஎஸ் அலுவலர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்தது. குறிப்பாக, சென்னையில் உள்ள ஒவ்வொரு மண்டலத்தையும் கண்காணிப்பதற்குத் தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
12 மாவட்டங்களுக்கு 12 ஐபிஎஸ்
இந்நிலையில் இவர்களோடு ஒருங்கிணைந்து வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 14 ஐபிஎஸ் அலுவலர்களைத் தலைமைச் செயலாளர் இறையன்பு நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை உள்பட 12 மாவட்டங்களுக்கு 12 ஐபிஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு ஐபிஎஸ் அலுவலர்கள் கூடுதலாக இந்த பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையைப் பொறுத்தவரையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கண்காணிப்பு அலுவலராகவும் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மட்டும் உதவும் வகையில் சஞ்சய் குமார் ஐபிஎஸ் செயல்படுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு நடவடிக்கை
இவர்கள், ஏற்கனவே இந்த மாவட்டங்களுக்கான நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அலுவலர்களுடனும், மற்ற அமைச்சர்களுடனும் ஒருங்கிணைந்து மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைத்தல், பாதிக்கப்பட்ட இடங்களைக் கண்டறிதல், போக்குவரத்து சீர்செய்யத் திட்டமிடுதல், நிவாரண பொருட்கள் ஏற்பாடு செய்தல் என பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அலுவலர்கள் தங்களுக்காக அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தித் தேவைப்படும் இடங்களுக்குச் செல்லலாம் எனவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு மக்களுக்கான நிவாரணங்கள் சென்றடையத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: ஜி.என்.செட்டி சாலையில் தேங்கிய மழைநீர்; பொதுமக்கள் அவதி - களத்தில் ஈடிவி பாரத்