சென்னை வளசரவாக்கம் மீனாட்சியம்மன் நகரை சேர்ந்தவர் சதீஷ்(35). பில்டிங் கட்டுமான தொழில் செய்து வரும் சதீஷ் அதிமுகவில் மாணவர் அணி மாவட்ட செயலாளராக உள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு(ஜூன்.14) தனது நண்பர்களான பூந்தமல்லியை சேர்ந்த கட்டிட ஒப்பந்தாரரும், அதிமுக சென்னை மண்டல தகவல் தொழில்நுட்ப இணை செயலாளருமான அபிஷேக் ஜேக்கப்(31) மற்றும் பூந்தமல்லியை சேர்ந்த யாசின்ராஜ்(30) ஆகியோருடன் காட்டுபாக்கத்தில் உள்ள தனது திருமண மண்டபத்திலிருந்து 13 லட்ச ரூபாய் பணத்துடன் யாசினுக்கு சொந்தமான காரில் சேத்துப்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இதனையடுத்து 3 பேரும் நண்பர் சாலமனுக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக சேத்துபட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கார் வளசரவாக்கம் சென்ற போது சதீஷ் திடீரென தனக்கு வேலை இருப்பதாகவும், பணத்தை நாளை வாங்கி கொள்வதாக கூறிவிட்டு காரில் இருந்து இறங்கி ஆட்டோவில் புறப்பட்டு சென்றார்.
பின்னர் அபிஷேக்கும், யாசினும், 13 லட்ச ரூபாய் பணத்துடன் சேத்துபட்டு மெக்கானிக்கல் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை வாயிலில் காரை நிறுத்தி விட்டு குழந்தையை பார்க்க மருத்துவமனைக்குள் சென்றனர். சிறிது நேரம் கழித்து இருவரும் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்து காரில் ஏறினர்.
அப்போது காரின் பின்பக்க இருக்கையில் வைத்திருந்த 13 லட்சம் பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் உடனே இது குறித்து சேத்துபட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் பணம் திருடு போனதாக கூறப்படும் காரின் கண்ணாடி எதுவும் உடைக்கப்படாமல் இருப்பது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கார் சாவியை பயன்படுத்தி பணம் திருடப்பட்டதா? அல்லது யாசின் காரை பூட்டாமல் மறந்து சென்றாரா? என்பது குறித்து அபிஷேக், யாசின் இருவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 550 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு: கடத்தல் லாரி மீட்பு