சென்னை: நேற்று (ஜனவரி 12) காவல் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர் மற்றும் அமைச்சு பணியாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 115 பேருக்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேலைக்கான பணியாணையை வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், வேலை பெற்றுள்ள அனைவரும் உடனடியாக பிடிக்கவில்லை என பணியில் இருந்து விலகாமல், நிலைத்திருந்து அதிக அனுபவத்தை பெறுவதன் மூலம் அடுத்தடுத்த உச்சத்தை அடைய முடியும் என கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூன்றாவது அலையில் ஜனவரி 11ஆம் தேதி வரை 126 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிப்புக்குள்ளான காவலர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கப்படுவதால் தனிமைப்படுத்தல் மையத்திற்கான அவசியம் இல்லை என்று தெரிவித்தார். ஆறு காவலர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
நடிகர் சித்தார்த், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பெண் தொகுப்பாளர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட விவகாரத்தில் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளதாகவும், அதற்கேற்ப நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அவர் கூறினார்.
வைகுண்ட ஏகாதசி மற்றும் பொங்கல் பண்டிகைக்காக மக்கள் அதிகமாக சொந்த ஊருக்கு செல்வதால் ஜனவரி 12ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் 1,200 காவலர்கள் வீதம் 3 ஷிப்டுகளில் 19ஆம் தேதி வரை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ரவுடிகளை கைது செய்ய Dare ஆப்ரேஷன் கொண்டு வரப்பட்டு பல ரவுடிகள் கைது செய்யப்பட்டதால், கடந்த மூன்று மாதத்தில் 10 மடங்கு குற்றச்சம்பவங்கள் குறைந்திருப்பதாக அவர் கூறினார்.
செயின் மற்றும் செல்போன் பறிப்பு குற்றங்களை தடுக்க DACO ( Direct Against Crime Offender) என்ற பெயரில் புதிய ஆப்ரேஷனை தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 17,934 பேருக்கு கரோனா பாதிப்பு