சென்னை: தமிழ்நாட்டில் 2021- 22ஆம் கல்வி ஆண்டிற்கான பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மே 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்றது. 3 ஆயிரத்து 119 மையங்களில், 8 லட்சத்து 83 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுதினர். இதில் மாணவர்கள் 4 லட்சத்து 33 ஆயிரத்து 684 பேர் - மாணவிகள் 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 பேர்.
இந்த நிலையில், பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (ஜூன்) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளவும், பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளவும், மாணவர்களின் செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பவும் அரசுத் தேர்வுத்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது.