சென்னை: ஆந்திராவிலிருந்து சென்னை வழியாக காஞ்சிபுரம், மதுரை, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பெருமளவில் கஞ்சா கடத்தப்பட உள்ளதாக நாகப்பட்டினம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் இன்று காவலர்கள், சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள பொன்னியம்மன் பட்டறை சோதனைச் சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, நான்கு சக்கர வாகனம் ஒன்றில் 50 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல திருவள்ளூர் மாவட்டம் காக்கலூர் இடைமடையில் நடத்திய சோதனையில் 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இப்படி மொத்தமாக 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
முதல்கட்ட தகவலில், இந்த கடத்தல் தொடர்பாக மதுரையை சேர்ந்த நிலமலை (40), ரமேஷ் (23), உமா ஷங்கர் (34) ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.
மேலும் போதைப் பொருள் விற்பனை, கடத்தல் உள்ளிட்ட தகவல்களை பொதுமக்கள் 10581 என்னும் அவசர எண்ணுக்கோ அல்லது 94984 10581 என்னும் வாட்ஸ் ஆப் எண்ணுக்கோ அல்லது spnibcid@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தெரியப்படுத்தலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் பணத்தாசையில் கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது