சென்னை: திருவல்லிக்கேணி சமூக மகப்பேறியல் நிலையம், அரசு கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனைக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அறுவை சிகிச்சை மையம் புதுப்பிக்கப்பட்டு ஆம்புலன்ஸ், மருத்துவ உபகரணங்களை 'உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை' சார்பில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மேடையில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மக்கள் சேவையில் திமுக
பிறகு மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "2010ஆம் ஆண்டு நற்பணி மன்றமாக தொடங்கப்பட்டது. அறக்கட்டளை சார்பில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இதற்கு முன்பு கலைஞர் கருணாநிதி அவர்கள் இதே மருத்துவமனையில் ரூ. 90 லட்சத்திற்கு கட்டிடம் ஒன்று கட்டிக் கொடுத்தார்.
அதேபோன்று இப்போதும் ரூ. 90 லட்சம் செலவில் மருத்துவ உபகரணங்கள் வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக ஏற்பட்ட தீவிபத்தில் துரிதமாக செயல்பட்டு, எந்தவித பாதிப்பும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கரோனா தொற்றின் இரண்டாம் தாக்கத்தை சிறப்பாக கையாண்டு மக்கள் சேவை செய்துவருகிறது திமுக அரசு. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக ஒரு லட்சத்து,20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம் என்பதில் இந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் பெருமை கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
சிறப்பான திட்டம்
அதைத்தொடர்ந்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்பட்டு, குறைந்தபட்சமாக 90 நாள்களாகவது ஆன பின்புதான் நிதியை அத்தொகுதிக்கு பயன்படுத்தப்படும்.
ஆனால், இங்கு உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை சார்பில் ரூ. 90 லட்சம் செலவில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது பாராட்டுக்குரியது. தமிழ்நாட்டிற்கு ஆக்ஸிஜன் 450 மெட்ரிக் டன் தேவை. ஆனால், தற்போது 1000 மெட்ரிக் டன் கையிருப்பில் உள்ளது.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து,34 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து,20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவான அளவுள்ள மாவட்டத்திற்கு, தடுப்பூசிகள் அதிகப்படியாக வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் சிறப்பான ஒன்றாகும். இத்திட்டத்தில் மொத்தம் 13,247 பேர் இரண்டு நாள்களில் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலமாக இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கோடி பேர் பயனடைவார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை'