சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆய்வுமேற்கொண்டார். பின்னர் செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று ஒரு மாணவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து விடுதியில் உள்ள 300 மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒன்பது மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதித்த மாணவர்களை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த விடுதியில் தங்கியுள்ள 700 மாணவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் அதிகமானோர் ஒரே இடத்தில் கூடும்போது தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். சரியான முறையில் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும், மாணவர்கள் உணவருந்த ஒரே நேரத்தில் செல்லக் கூடாது, குழுக் குழுவாகச் செல்வதற்குப் பல்கலைக்கழகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விதிமுறைகள் கடுமையாகக் கண்காணிப்பு
உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலர்களோடு நாளை ஆலோசனை மேற்கொண்டு பள்ளி, கல்லூரி வளாகம், விடுதிகள், உணவகங்களில் பின்பற்றப்படும் விதிமுறைகளைக் கடுமையாகக் கண்காணிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
அதிக பாதிப்புகள் உள்ள நாடுகளிலிருந்து வந்த பயணிகளில் 9,012 பேருக்கு விமான நிலையங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 11 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதிக பாதிப்பு இல்லாத நாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இரண்டு பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் தொற்று இல்லை
இந்த 13 பேரின் மாதிரிகளை தமிழ்நாட்டில் உள்ள மரபணு சோதனை மையங்களில் ஆய்வுமேற்கொண்டதில், அவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை. மறு ஆய்வுக்குள்படுத்த பெங்களூருவில் உள்ள மரபணு சோதனை மையத்திற்கு 13 பேரின் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் இன்று அல்லது நாளை வெளிவரும். தமிழ்நாட்டில்தான் அதிக மரபணு பரிசோதனை மையங்கள் உள்ளன.
தான்சானியா, கானா போன்ற நாடுகளிலிருந்து வருபவர்களுக்கும் இனி விமான நிலையங்களில் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதிக பாதிப்புள்ள நாடுகள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது” எனக் கூறினார்.
கைப்பேசி எண்ணை தவறுதலாகக் கொடுப்பதாலும், மற்றொருவர் தொலைபேசி எண்ணை அளித்து வேறொருவர் தடுப்பூசி செலுத்திக்கொள்வதால், குறிப்பிட்ட நபருக்கு சான்றிதழ் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்அப் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். மேலும், மக்கள் பதற்றமடைய தேவையில்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா நிவாரணத் தொகை: உடனடியாக வழங்க தமிழ்நாடு அரசு ஆணை