சென்னை: வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து U.S.பங்களா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று (ஆக.4) பகல் 12:30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அதை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.63 லட்சம் மதிப்புள்ள 1.36 கிலோ தங்கக்கட்டியை கண்டதைத் தொடர்ந்து அதனை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.
முன்னதாக, விமானத்திற்குள் ஒரு இருக்கையை சரி செய்ய முயன்றபோது, அதற்கு கீழே ஏதோ ஒரு பொருள் மறைத்து வைத்திருப்பதை பணியாளர்கள் கண்டுபிடித்தனர். உடனே இருக்கையை எடுத்து பார்த்தபோது, அதற்கு கீழே கறுப்பு கலரில் ஒரு பார்சல் இருந்தது.
இதை அடுத்து விமானநிலைய அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அலுவலர்கள் மெட்டல் டிடெக்டருடன் விரைந்து வந்து, அந்த கருப்பு பார்சலை சோதனை செய்தனர். அதில் வெடி மருந்து, வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அதை திறந்து பார்க்கையில் ஒரு தங்க கட்டி இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
உடனடியாக சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து, தங்க கட்டியை பறிமுதல் செய்து, ஆய்வு செய்தபோது, ஒரு கிலோ 364 கிராம் எடை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.63 லட்சம் ஆகும். இதை அடுத்து சுங்க அலுவலர்கள் தங்க கட்டியை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். அதோடு, விமானத்துக்குள் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள், விமான பயணிகள் வருகை பகுதியில் உள்ள சிசிடிவி பதிவு காட்சிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, கடத்தல் ஆசாமிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் பகல் 2 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், ஒரு மணி நேரம் தாமதமாக, மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்றது. துபாய் சாா்ஜா, குவைத், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தான் தங்க கட்டிகள், சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்படும். ஆனால் தற்போது முதல் முறையாக வங்கதேசத்தில் இருந்து வந்த விமானத்தில் இந்த தங்கம் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போர் முனைப்பில் சீனா..! எச்சரிக்கும் அமெரிக்கா..! எந்த நேரத்திலும் தைவான் மீது படையெடுக்க வாய்ப்பு...?