டெல்லி: சிறு சேமிப்பு என்பது இன்றைய சூழலில் மிகவும் முக்கியமான ஒன்றாக மாறி இருக்கிறது. குழந்தைகளின் எதிர்கால கல்வி மற்றும் முதியோர்களுக்கான வாழ்வாதாரத்தைக் கருதி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையில் சிறு சேமிப்பு திட்டம் மக்களைச் சென்றடைந்து வருகிறது. மேலும், மக்களின் இந்த தேவையைக் கருத்தில் கொண்டு வங்கிகளும் பல்வேறு சேமிப்பு மற்றும் ஃபிக்சேடு வைப்புத்தொகை திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.
மேலும், வீட்டில் உள்ள குழந்தைகள் மத்தியில் சேமிப்பின் மீதான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அவர்களுக்கான வங்கிக் கணக்குகள் தொடங்குவது, சிறு துளி பெரு வெள்ளம் என்ற வகையில் சேமிப்பை மேற்கொள்வது உள்ளிட்ட திட்டங்களும் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில், இதுபோன்ற வங்கி சிறு சேமிப்பு திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கான பணத்திற்கு வட்டி வழங்கும் விகிதம் குறித்து முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
அந்த வகையில், 5 வருடகால வைப்புத்தொகைகளுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. மத்திய அரசின் இந்த வட்டி விகிதம் வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை மட்டுமே பொருந்தும் எனவும், 2024ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதம் குறித்து மத்திய நிதித்துறை அறிவிப்பு வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பிரபலமான சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள்; பொது வருங்கால வைப்பு நிதி என்று அழைக்கப்படும் public provident fund மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்ற திட்டங்களின் வட்டி விகிதங்களில் மத்திய அரசு எவ்வித மாற்றமும் ஏற்படுத்தவில்லை. இது தவிரப் பிரபலமான வேறு எந்த சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை மத்திய அரசு உயர்த்தாமல் இருப்பது வாடிக்கையாளர்களை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதியில் 7.1%, சேமிப்பு வைப்புத்தொகையில் 4.0%, தேசிய சேமிப்புச் சான்றிதழில் 7.7%, சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் 8%, மூத்த குடிமக்களுக்கு 8.2% சேமிப்புத் திட்டம், கிசான் விகாஸ் பத்திரத்தில் 7.5% மற்றும் மாதாந்திர வருமானத் திட்டத்தில் 7.4%. சமீபத்திய வட்டி விகிதங்களில், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டமானது அதிகபட்சமாக 8.2 சதவீத வட்டியைப் பெறும். குறைந்தபட்ச சேமிப்பு வைப்புத்தொகைக்கு 4.0 சதவீத வட்டி கிடைக்கும். அதேபோல பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளுக்கான தபால் நிலைய சேமிப்பு திட்டம் என பல்வேறு சேமிப்பு திட்டங்களும் அதற்கான வட்டியும் வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Family Budget plan in Tamil: உயரும் செலவுகள்! சேமிப்பது எப்படி.?