தனிநபருக்கு டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை வழங்கும் வங்கிகள் அல்லது தனிப்பட்ட சேவை நிறுவனங்கள், நுகர்வோரின் பான் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை சேமிக்கிறது. இவை அனைத்தும் நாம் மேற்கொள்ளும் ஆன்லைன் பரிவர்த்தனையின்போது சில சமயங்களில் தவறான முறையில் சேமிக்கப்பட்டும், பண மோசடிகளுக்கும் வழிவகுக்கிறது.
இந்நிலையில் கடந்த 2021 செப்டம்பரில் இந்திய ரிசர்வ் வங்கி ‘டோக்கனைஷேசன்’ (Tokenization) என்ற முறையை அறிமுகப்படுத்தி, அது தொடர்பான அறிக்கையை வெளியிட்டது. இதன்படி கடந்த ஜூன் 30 முதல் இந்த டோக்கனை பலரும் பெறத் தொடங்கினர்.
பொதுவாகவே நாம் ஒரு ஆன்லைன் பரிவர்த்தனையை மேற்கொள்ளும்போது, டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளில் உள்ள 16 இலக்க ரகசிய எண், சிவிவி எண் மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவற்றை உள்ளிட வேண்டும். இவ்வாறு பரிவர்த்தனை தொடரும்போது, ஆன்லைன் வர்த்தகத்தை மேற்கொள்ளக்கூடிய நிறுவனங்கள், அந்நிறுவனங்களின் மென்பொருள் தரவு மையங்கள் ஆகியோரிடத்தில் தகவல்கள் சேமிக்கப்படும்.
ஆனால் ஆர்பிஐ டோக்கனை பெறும்போது, இவ்வாறான அனைத்தும் மறைக்கப்பட்டுவிடும். இவ்வாறு ஆர்பிஐ டோக்கன் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும்போது, பணம் செலுத்தும் பகுதியில் கார்டுகளின் இறுதி இலக்க எண்கள் மட்டுமே வெளிப்படும். சிவிவி எண், காலாவதி நாள் மற்றும் கார்டுகளின் முழு எண்கள் ஆகியவை சேமிக்கப்படாது.
ஆனால், ஆர்பிஐ-ன் டோக்கன் தரவு மையத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். இதனால் நுகர்வோர்களுக்கு எவ்வித எதிர்வினைகளும் ஏற்படாது. ஏனென்றால் இதனை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இந்த டோக்கனை பெறுவதற்கான வழிமுறைகளை ஆர்பிஐ தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் எவ்வாறு இந்த டோக்கனை பெறுவது என்பது குறித்தும் வழிமுறைகள் தரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்,
- தங்களுக்கு தேவையான ஆன்லைன் வர்த்தக தளத்தில் பொருட்களை தேர்வு செய்யவும்.
- பணம் செலுத்தும் பக்கத்தில் கார்டு வகையினை தேர்வு செய்யவும்.
- அதில் தேவையான தகவல்களை உள்ளிடவும்.
- பின்னர் 'secure your card as per RBI guidelines’ என்பதை தேர்வு செய்து, அதில் ஆர்பிஐ வழிகாட்டுதலின்படி தகவல்களை உள்ளிடவும்.
- உங்களுக்கு ஒன் டைம் பாஸ்வேர்டு வரும்.
- அதனை உள்ளிட்டால், உங்களது டோக்கன் எண் கிடைக்கும்.
- இந்த டோக்கன் எண் ஆன்லைன் வர்த்தக தளத்தினரால் சேமிக்கப்படும்.
- அடுத்ததாக நீங்கள் ஆன்லைன் வர்த்தகத்தை பயன்படுத்தும்போது, இந்த டோக்கன் எண் மட்டுமே இருக்கும். இதனை வைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
இந்த இந்திய ரிசர்வ் வங்கியின் டோக்கன் முறை இன்று முதல் பாதுகாப்பான ஆன்லைன் வர்த்தகத்தில் தனித்துவம் பெறும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வீட்டுக் கடன் வட்டி 9.5%க்கு மேல் அதிகரிப்பது வீட்டு விற்பனையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்...