டெல்லி: இதுகுறித்து மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாட்டின் மின்சாரம் மற்றும் ரயில்வேத்துறை அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து மின்துறைக்கு வழங்கப்படும் நிலக்கரி நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையிள் காரணமாக, உள்நாட்டு நிலக்கரி பயன்பாட்டின் கீழ் உள்ள அனல்மின் நிலையங்களில் நிலக்கரியின் இறுதி இருப்பு, இந்தாண்டு அக்டோபர் 31ஆம் தேதி நிலவரப்படி, 25.6 மில்லியன் டன் ஆக இருந்தது.
இது கரோனா பெருந்தொற்று 2020-21 ஆண்டைவிட அதிகபட்ச இருப்பாகும். மின்துறைக்கான உள்நாட்டு நிலக்கரி விநியோகம் கடந்தாண்டின் இதே காலத்தை விட 12 சதவீதம் அதிகமாக உள்ளது. இது எந்த நிதியாண்டிலும் முதல் ஏழு மாதங்களில் மின்சாரத் துறைக்கு இதுவரை இல்லாத அதிகபட்ச விநியோகமாகும்.
மொத்த உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 18 சதவீதம் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்) 17.5 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. ஒதுக்கப்பட்ட நிலக்கரித் தொகுதிகள் முதல் ஏழு மாதங்களில் 58.6 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து, முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 37.5 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்)-இன் அனைத்து ஆதாரங்களிலிருந்தும் மின் துறைக்கு நாளொன்றுக்கு உள்நாட்டு நிலக்கரி 296.5 ரேக்குகள் வழங்கப்படுகின்றன.
இது முந்தைய ஆண்டின் இதே காலத்தை விட 19 சதவீதம் அதிகரித்துள்ளது. நிலக்கரி உற்பத்தி திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், சமீபத்தில் 141 புதிய நிலக்கரி சுரங்கங்களை வணிக ஏலத்திற்கு விட்டது. முன்னதாக ஏலம் விடப்பட்ட சுரங்கங்களை விரைவாக செயல்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் மற்றும் மத்திய அமைச்சகங்களுடன் ஒருங்கிணைத்து நடவடிக்கைகளை விரைவு படுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உலகின் சிறந்த வேலை அளிப்போர் தரவரிசை பட்டியலில் 20ஆவது இடத்தில் 'ரிலையன்ஸ் இந்தியா'