சென்னை: குதிரைக்குக் கடிவாளம் கட்டி அதற்கு முன்னே ஒரு கேரட்டை தொங்கவிட்டால், அதை எடுத்து உட்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அது ஓடிக்கொண்டே இருக்கும், ஆனால் கடைசி வரை கேரட் மட்டும் அந்த குதிரைக்குக் கிடைக்கவே கிடைக்காது. அப்படித்தான் இங்குப் பலரது வாழ்க்கை பயணமும் நீடிக்கிறது. உடலில் ஆற்றல் உள்ளபோது அனுபவம் இருக்காது.. அனுபவம் பெறும்போது ஆற்றல் இருக்காது. கடைசியில் வாழ்நாள் முழுவதும் ஓடிய ஓட்டம் அத்தனையும் வீணாகவே போய்விடும். இந்த நிலை யாருக்கும் வேண்டாம்.
வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என நினைக்கிறீர்களா? சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டு அதன் பின்னால் ஓட ஆரம்பியுங்கள். இலக்கை நிர்ணயம் செய்யாமல் ஓடிக்கொண்டே இருந்தால், அந்த குதிரை கேரட்டிற்காக ஓடிய நிலைதான் மிஞ்சும். அந்த வகையில் சமுதாயத்திலும், தொழில் உள்ளிட்ட அனைத்து துறையிலும் முன்னேற்றம் அடைந்த பலரின் பொதுவான சில ரகசிய குணங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். அதுபோன்ற ஒரு திட்டமிடுதலுடன் ஓட ஆரம்பியுங்கள்.
- இலக்கை நிர்ணயம் செய்வது: நீங்கள் ஏதோ ஒரு துறையில் முன்னேற வேண்டும் என நினைக்கிறீர்களா? முதலில் அதற்கான இலக்கை நிர்ணயம் செய்து திட்டமிடுங்கள். அதை நீங்கள் அடைவதற்கான வழி, காலம் மற்றும் பொருளாதாரம் உள்ளடக்கிய திட்டமிடலாக அது இருக்க வேண்டும். அதற்குப் பிறகு அதனை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தினமும் உழைக்க ஆரம்பியுங்கள். காலப்போக்கில் நீங்கள் அடைய வேண்டும் என நினைத்த இலக்கை கண்டிப்பாக அடைவீர்கள். இது பொருளாதாரத்தில் மட்டும் அல்ல.. உங்கள் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் அறிவை உள்ளடக்கியதாக இருக்கும்.
- வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருத்தல்: வாழ்க்கையில் முன்னேர வேண்டும் என நினைக்கும் மனிதர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அறிவை கூர்மை படுத்துவதற்காக ஏதோ ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டே இருப்பார்கள். அதில் அவர்களுக்குச் சலிப்பு வரவே கூடாது. கற்றல் நீங்கள் உங்கள் இலக்கை எளிதில் சென்றடைவதற்கான வழிகாட்டியாக இருக்கும். அது மட்டும் இன்றி வரும் சவால்களை எதிர்கொள்ளவும், பொருளாதாரத்தை நேர்த்தியாகக் கையாளவும் உங்களுக்கு உதவும்.
- தொடர்புகளை விரிவுபடுத்தல்: வலுவான தொடர்புகளை உருவாக்குவதும் அதைத் தக்க வைத்துக்கொள்வதும் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்ற மனிதர்களின் ஒரு பொதுவான பண்பாக இருக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. நீங்கள் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதை.. நீங்கள் விரிவுபடுத்தி வரும் தொடர்புகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியான மனிதர்களை நீங்கள் உங்கள் தொடர்பு வரையறைக்குள் கொண்டுவருவதன் மூலம், அதனால் பொருளாதார வளர்ச்சி மற்றும் அனுபவ ரீதியான வளர்த்தியை பெறுவீர்கள். அது மட்டும் இன்றி உங்கள் தொழிலை விரிவுபடுத்த இந்த தொடர்பு விரிவாக்கம் மிகுந்த உதவியாக இருக்கும்.
- முதலீட்டில் கவனம் மற்றும் புத்திசாலித்தனம்: தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக வெற்றி பெரும் நபர்கள் அதிலும் குறிப்பாகப் பெண்கள் பன்முகத்தன்மை கொண்ட முதலீடுகளில் ஈடுபடுகின்றனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் முதல் தொழில்முனைவு முயற்சிகள் வரை அனைத்திலும் தங்களைக் கவனமுடன் ஈடுபடச் செய்யும் அவர்கள், இதன் மூலம் தொழில் ரீதியாக வரும் சவால்கள் மற்றும் சிக்கல்களை எதிர்கொள்ளக் கற்றுக்கொள்கின்றனர். இதனால் அவர்கள் மற்ற தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும்போது வரும் அபாயகரமான விளைவுகளில் சிக்காமல் தப்பித்துக்கொள்கின்றனர்.
- ஆரோக்கியம் மற்றும் அமைதியான வாழ்க்கை முறைக்கு முன்னுரிமை: வாழ்க்கையிலும் சரி, தொழிலும் சரி வெற்றி பெற்ற அனைவருமே தங்கள் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்கு முக்கியத்துவம் வழங்குபவர்களாகவே உள்ளனர். தங்கள் தொழில் மற்றும் முன்னேற்றத்திற்கு வழங்கும் முக்கியத்துவத்தையும், அதற்காக ஒதுக்கும் நேரத்தையும் விட தங்கள் ஆரோக்கியத்தையும், மனதையும் வளமாக வைக்கும் செயல்களுக்கே முதல் முன்னுரிமை வழங்குகின்றனர். இதனால் அவர்கள் நீண்ட காலம் உழைக்கவும், நீண்டகாலம் வாழவும் அது வழிவகை செய்கிறது. இதனால் முழுமையான ஆற்றலுடன் பொருளாதாரத்தைப் பன்மடங்காக உயர்த்த முடிகிறது.
- தொழில் முனைவோர் மனப்பான்மை: வசதியான பெண்கள் பலர் தொழில் முனைவோர் அதாவது புதிதாக, சொந்தமாக அல்லது தனியாக, தனித்துவமாக எனப் பன்முகத்தன்மையுடன் தொழில் செய்யும் மனநிலையில் உள்ளனர். ஆண்களும் அதேபோன்ற பண்புகளைத்தான் கொண்டுள்ளனர். இதன் மூலம், தொழில் ரீதியாக வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், வெற்றியோ, தோல்வியோ ஒரு கை பார்த்து விடுவோம் என்ற மனப் பக்குவம் பெற்றவர்களாக உள்ளனர்.
- இரக்கம் மற்றும் உதவும் குணம்: வாழ்க்கையில் வெற்றி பெற்ற பிறகு அல்லது பொருளாதார ரீதியாகச் சாதித்த பிறகு மட்டும் அல்ல பொதுவாகவே அவர்கள் இரக்கம் மற்றும் உதவும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். சமூகத்தின் மூலம் தாங்கள் சம்பாதிக்கும் செல்வத்தைச் சிறு பங்கு அதே சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்பதன் மூலம் அவர்கள் நிறைவான ஒரு மனநிலையை உணர்கிறார்கள். இது சமுதாயத்தில் உதவி தேவைப்படும் மக்களுக்கு நலன் கிடைக்கச் செய்வது மட்டும் இன்றி, உதவுவதன் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துக்கூறும் வகையிலும், இதன் மூலம் அவர்கள் வாழ்க்கை மேலும் சிறக்கும் வகையிலும் அமையும் என அவர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.
இதையும் படிங்க: மரம் போடும் முட்டை: சைவ முட்டை பழத்தின் அசாத்திய பலன்கள்.!