டெல்லி: இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக்கழகத்தில் (ஐ.ஆர்.சி.டி.சி) உள்ள பங்குகளின் ஒரு பகுதியை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இணைய ரயில் பதிவுச்சீட்டு முன்பதிவு, ரயில்களில் குடிநீர், உணவு பொருட்கள் ஆகியவற்றிக்கு கேட்டரிங் சேவைகளை வழங்க, இந்திய ரயில்வே அங்கீகாரம் பெற்ற ஒரே நிறுவனம் ஐ.ஆர்.சி.டி.சி ஆகும். ஐ.ஆர்.சி.டி.சியில் தற்போது மத்திய அரசு 87.40 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கிறது.
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபியின் (Sebi) பொது விதிமுறையை பூர்த்தி செய்ய, அரசு ஐஆர்சிடிசியின் பங்குகளை 75 விழுக்காடாக குறைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து வணிக வங்கியாளர்கள் செப்டம்பர் 10க்குள் தங்கள் ஏலங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு தனது ரூ. 2.10 லட்சம் கோடி முதலீடுகளைத் திரும்பப் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், ரூ. 1.20 லட்சம் கோடி பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகளை திரும்ப பெறுவதன் மூலம் கிடைக்கும். மீதி ரூ. 90 ஆயிரம் கோடி நிதி நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும்.
ஐ.ஆர்.சி.டி.சி பங்குகளை விற்கும் நடவடிக்கை மூலம் மத்திய அரசு, இந்த இலக்கை நோக்கி முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.