தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமான டிசிஎஸ் சந்தை மதிப்பு முதன்முறையாக 9 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இந்தியாவில் ரிலையனல் குழுமத்திற்கு அடுத்தபடியாக இந்த சந்தை மதிப்பை டிசிஎஸ் பெற்றுள்ளது.
பிஎஸ்இ கணக்கின்படி, டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு 2.91 விழுக்காடு அதிகரித்து ரூ.2,442.80 ஆக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. என்எஸ்இ கணக்கின்படி, வாழ்நாளில் முதன்முறையாக 2.76 சதவீதம் உயர்ந்து ரூ.2,439.80 ஆக நிறுவனத்தின் பங்கு அதிகரித்துள்ளன.
இந்த திடீர் பங்கு விலை உயர்வின் காரணமாக, டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு பிஎஸ்இ-யில் ரூ.9,14,606.25 கோடியாக உயர்ந்துள்ளது. சந்தை மதிப்பை கணக்கிடுகையில், இரண்டாவது மிக மதிப்புமிக்க உள்நாட்டு நிறுவனமாக டிசிஎஸ் திகழ்கிறது.
முன்னதாக, ரிலையன்ஸ் நிறுவனம் இந்த 9 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை கடந்த அக்டோபர் மாதத்தில் எட்டியது. தற்போது, அதன் சந்தை மதிப்பு சுமார் 15 லட்சத்து 78 ஆயிரம் கோடியாக உள்ளது எனக் கூறப்படுகிறது.