நாட்டின் முதுகெலும்பான வேளாண்மைத் துறை கடுமையான சவால்களைச் சந்தித்துவருகிறது. இந்த நேரத்தில், இந்திய வேளாண்மையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் கொண்டுவந்த இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுடன் நமது ஈடிவி பாரத் சிறப்பு நேர்காணல் நடத்தியுள்ளது. இதில்,
- விவசாயிகளின் வருவாயை இரடிப்பாக்குவது,
- இளைஞர்களை விவசாயத்திற்குள் கொண்டுவருவது,
- எதிர்கால விவசாயத்தின் நிலை,
- வேளாண்மைத் துறையில் உள்ள பிரச்னைகள் குறித்து அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். கேள்வியும் பதிலும் வருமாறு:
கேள்வி: விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என மத்திய அரசு கூறுகிறது. தற்போதுள்ள சூழலில் இது சாத்தியமா?
- பதில்: வேளாண்மை... பொருளாதாரச் சிக்கல்கள் இல்லாமல் தொடர்ந்து இயங்க விவசாயிகளின் வருமானம் அவசியமானது. அப்படி இல்லையென்றால் தொடர்ந்து விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டியநிலை ஏற்படும். தற்போது ஏராளமான விவசாயிகள் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரிக்கைவைக்கின்றனர். விவசாயிகளின் வருமானம் போதிய அளவில் இல்லாததால் அவர்களால் கடனைத் திரும்பச் செலுத்த முடியவில்லை. இதனால்தான் அவர்கள் கடன் தள்ளுபடி கோரிக்கையை முன்வைக்கிறார்கள்.
- நமது நாடு இளைஞர்களை அதிகமாகக் கொண்ட நாடு. நாட்டின் 45 சதவிகித இளைஞர்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். அவர்கள் தங்களது வருவாய்க்கு விவசாயத்தை நம்பியுள்ளனர். வேளாண்மை பொருளாதார ரீதியாக லாபம் ஈட்டக்கூடியதாக இருந்தால்தான் இளைஞர்கள் விவசாயத்தை நோக்கி ஈர்க்கப்படுவார்கள்.
- நான் தலைமை ஏற்ற விவசாயிகளுக்கான தேசிய ஆணையம் (சுவாமிநாதன் ஆணையம்), எதிர்காலத்தில் வேளாண்மைத் துறையில் அரசு எடுக்கும் கொள்கை முடிவுகள் வேளாண்மை உற்பத்தியைவிட விவசாயிகளின் வருமானத்தை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். விவசாய உற்பத்தி முக்கியம் என்றாலும், விவசாயிகளின் வருவாய் அதனைவிட முக்கியமானது. தற்போது விவசாயிகளின் வருமானத்தை இரடிப்பாக்க வேண்டும் எனப் பிரதமர் கூறியுள்ளார். இது சாத்தியம்தான், ஆனால் இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.
கேள்வி: விவசாயிகளின் வருமானத்தை இரடிப்பாக்க அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?
- பதில்: விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நாம் உள்ளீட்டுப் பொருள்களின் விலை, உற்பத்தி விலை, வரிக்கொள்கைகள், சந்தைப்படுத்துதல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மியான்மரில் நெல் பயிரின் அனைத்து பாகங்களைப் பயன்படுத்தி விவசாயிகளின் வருமானம் மூன்று மடங்கு, நான்கு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் கோதுமை உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் செய்ய முடியும். நாம் தற்போது நமது உற்பத்தியில் 40- 50 சதவிகிதம் வரைதான் பயன்படுத்துகிறோம். விவசாய உற்பத்தி பொருள்களில் மதிப்புக்கூட்டுச் சேவைகள் வழங்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன, அதனைப் பயன்படுத்த வேண்டும்.
கேள்வி: பலரும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறிவருகின்றனர். இது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது என நீங்கள் நினைக்கிறீர்களா?
- பதில்: நாம் தொழில் துறையைப் பற்றி பேசும்போது அது எவ்வளவு லாபம் ஈட்டுகிறது என்று பார்ப்போம். ஆனால் வேளாண்மைத் துறையில் எவ்வளவு உற்பத்தி நடைபெற்றுள்ளது என்றுதான் பார்க்கிறோம். நாட்டின் மக்கள் தொகைக்குத் தேவையான உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதா என்றுதான் பார்க்கிறோம். வேளாண்மை உற்பத்திக் கொள்கை, விலைக் கொள்கை, சந்தைப்படுத்துதல் கொள்கை ஆகியவை விவசாயிகள், பொதுமக்களுக்குச் சாதகமாக இருக்க வேண்டும்.
- இது தொடர்பாக நான் பல வழிகளைச் சுட்டிக்காட்டியுள்ளேன். எடுத்துக்காட்டாக, சாதாரண அரசியை பயிரிட்டால் ஹெக்டேருக்கு 1-2 டன் விளைச்சல் கிடைக்கும் நிலையில், கலப்பின (ஹைபிரிட்) அரசியை பயிரிட்டால் 5-7 டன் அதிக விளைச்சல் கிடைக்கும். இதனால் ஒரு ஹெக்டேருக்கு கூடுதலாக ஐந்து டன் வரை அதிகம் உற்பத்தி செய்ய முடியும். இதன்மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
கேள்வி: இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள், அரசுக்கு உங்கள் பரிந்துரைகள் என்ன?
- பதில்: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் தொழில் வேளாண்மை. இது மற்ற தனியார் துறைகள் போல் இல்லை. நிலம் தனித்தனி விவசாயிகளிடம் உள்ளது. என்ன பயிரை விளைவிக்க வேண்டும், எதனை விளைவிக்கக் கூடாது என அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். இதனால் அரசு என்ன செய்ய வேண்டும் என்று கேட்பதோடு விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும். விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை அரசு செய்ய வேண்டும்.
- பருவமழை, சந்தைப்படுத்துதல், மேலாண்மை ஆகிய மூன்றுமே விவசாயத்தின் மூன்று தூண்கள். இதனை நாம் சரியாக கவனிக்க வேண்டும். அதேபோல், அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற திட்டங்களை அரசு வகுக்க வேண்டும். நாடு முழுவதும் ஒரே மாதிரியான வேளாண்மைக் கொள்கையை வகுப்பதால் எந்தப் பயனும் இல்லை. தேசியக் கொள்கை மாநிலக் கொள்கையாக வேண்டும். மாநில திட்டங்களுக்குப் பதிலாக பஞ்சாயத்து அளவில் திட்டமிடப்பட வேண்டும்.
கேள்வி: விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக வீதிகளில் இறங்கி போராடிவரும் நேரத்தில் இளைஞர்கள் விவசாயத்தை நோக்கி ஈர்க்கப்படுவார்கள் என நினைக்கிறீர்களா?
- பதில்: இளைஞர்கள் விவசாயத்தை நோக்கி ஈர்க்கப்படவில்லை என்றால் வேளாண்மைக்கு எதிர்காலம் இல்லை. நான் இளைஞனாக இருந்தபோது மருத்துவராக ஆசைப்பட்டேன். எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்தபோதிலும், நாட்டின் வளர்ச்சிக்கு வேளாண்மைத் துறை வளர்ச்சியே உதவும். விவசாய வளர்ச்சி விஞ்ஞானத்தை நம்பி உள்ளது என நினைத்து வேளாண்மையை தேர்ந்தெடுத்தேன். நான் விவசாயத்தால் ஈர்க்கப்பட்டேன். இன்றைக்கு அந்த நிலை இல்லை.
கேள்வி: விவசாயத் துறையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என நினைக்கிறீர்கள்?
- பதில்: தொழில்நுட்பத்தையும், வணிகத்தையும் புகுத்தினாலே விவசாயத்திற்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. பருவநிலை மாற்றத்துக்கு ஏற்பவும் நாம் மாற்றங்களைச் செய்ய வேண்டும். 'வளம் குன்றா வேளாண்மை' என்பதே நமது கொள்கையாக இருக்க வேண்டும். உலக வர்த்தக அமைப்புகள் நமது கொள்கைகளைத் தீர்மானிக்கக் கூடாது. உலகச்சந்தை நமது உற்பத்தியை தீர்மானிக்கக் கூடாது.
கேள்வி: ஜீரோ பட்ஜெட் ஃபார்மிங் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: செலவில்லாத வேளாண்மை (ஜூரோ பட்ஜெட் ஃபார்மிங்) என்பதை நான் ஏற்கமாட்டேன்; அப்படி ஒன்று இல்லை. தேவையில்லாத செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று அர்த்தத்தில்தான் நிர்மலா சீதாராமன் கூறியிருக்க வேண்டும்.