எரிசக்தி, தொழில்நுட்பம், வங்கித் துறை ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் பெரும் ஆர்வம் காட்டியதால் இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்வைச் சந்தித்துள்ளது.
இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 997.46 புள்ளிகள் (3.05 விழுக்காடு) உயர்ந்து 33,717.62 புள்ளிகளிலும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 306.55 புள்ளிகள் (3.21 விழுக்காடு) உயர்ந்து 9,859.9 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 1,167 புள்ளிகள் வரை உயர்ந்தது.
ஏற்றம் - இறக்கம் கண்ட பங்குகள்
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் பங்குகள் அதிகபட்சமாக 13 விழுக்காடு வரை ஏற்றம் கண்டது. அதைத்தொடர்ந்து ஹெச்.சி.எல் டெக், ஹீரோ மோட்டோகார்ப், என்.டி.பி.சி., டி.சி.எஸ்., எம்&எம், இன்போசிஸ், மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வை கண்டன.
அதேபோல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா நிறுவனங்கள் தங்கள் ஆண்டு வருவாய் கணக்கை வெளியிடவுள்ள நிலையில் மூன்று விழுக்காடு வரை அதன் பங்குகள் உயர்ந்தன.
மறுபுறம் ஹெச்.யூ.எல்., சன் பார்மா, இண்டஸ்இண்ட் வங்கி, ஆசிய பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இறக்கம் கண்டன.
காரணம் என்ன?
ரெமடிசிவர் மருந்தின் மூலம் கரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடிவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவித்துள்ளதும் ஊரடங்கைத் தளர்த்த பல்வேறு நாடுகளும் நடவடிக்கைகளை ஈடுபட்டுவருவதும் பங்குச் சந்தை ஏற்றத்திற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
சர்வதேச பங்குச் சந்தை
ஷாங்காய், டோக்கியோ பங்குச் சந்தை ஏற்றம் கண்டன. அதேநேரம் ஐரோப்பிய பங்குச் சந்தை சிறிய அளவில் சரிவைச் சந்தித்து வர்த்தகமாகிவருகிறது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஒன்பது விழுக்காடு உயர்ந்து 26.4 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகிவருகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 57 பைசாக்கள் உயர்ந்து 75.09 ரூபாய்க்கு வர்த்தகமானது.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்க பொருளாதாரம் பெரும் சரிவு!