கோவிட்-19 வைரஸ் தொற்று காரணாமாக சர்வதேச அளவில் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட மந்தநிலையைவிட மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் அச்சம் தெரிவித்தது.
நாட்டின் பொருளாதாரத்தைக் காக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இருப்பினும் வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகள் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதனால் கடந்த சில வாரங்களாகவே இந்தியப் பங்குச்சந்கைள் கடும் சரிவைச் சந்தித்துவருகின்றன.
2019-20ஆம் நிதியாண்டின் இறுதி நாளான நேற்று சென்செக்ஸ் 1,028 புள்ளிகளும் நிஃப்டி 316 புள்ளிகளும் உயர்ந்து வர்த்தகமாகின. பொருளாதாரத்தை மீட்டெக்க மத்திய அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதால் 2020-21ஆம் நிதியாண்டின் முதல் நாளான இன்றும் பங்குச் சந்தைகள் உயரும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
இருப்பினும் எதிர்பார்ப்புகளைப் பொய்யாக்கும் வகையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே இந்தியப் பங்குச்சந்தைகள் பெரும் சரிவைச் சந்தித்துவருகின்றன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 1,005 புள்ளிகள் குறைந்து 28,462 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது. அதேபோல தேசியப் பங்குச்சந்தையான நிஃப்டி 287 புள்ளிகள் குறைந்து 8,310 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது.
அதிகபட்சமாக கோடக் வங்கியில் பங்குகள் எட்டு விழுக்காடு வரை சரிவைச் சந்தித்துள்ளது. அதைத்தொடர்ந்து எஸ்பிஐ, இன்போசிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, டெக் மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. மறுபுறம் இண்டஸ்இண்ட் வங்கி, பவர் கிரிட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.
3,044.94 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை FIIs எனப்படும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை விற்க முடிவெடுத்ததே இதற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
சர்வதேச அளவிலும் ஷாங்காய் பங்குச் சந்தையைத் தவிர ஹாங்காங், டோக்கியோ, சியோல் உள்ளிட்ட பங்குச் சந்தைகள் கடும் சரிவையே சந்தித்தன. சர்வதேச அளவில் மிக முக்கியப் பங்குச்சந்தையாகக் கருதப்படும் அமெரிக்காவின் வால்ஸ் டீரிட்டில் உள்ள நியூ யார்க் பங்குச் சந்தையும் நள்ளிரவு வர்த்தகத்தில் நஷ்டத்தைச் சந்தித்தது. அதேபோல கச்சா எண்ணெய் விலையும் 76 விழுக்காடு குறைந்து, ஒரு பேரல் 26.15 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமானது.
இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: 100 கோடி ரூபாய் வழங்கும் எஸ்பிஐ ஊழியர்கள்