டெல்லி: நிதி திரட்டும் முயற்சியாக, வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ரோலெக்ஸ் ரிங்க்ஸ், ரூ.880 முதல் ரூ.900 என்ற மதிப்பில் தங்கள் பங்கின் சலுகை விலையை அறிவித்து பொது வெளியீட்டில் இறங்கியது.
மூன்று நாட்கள் மட்டும் பொது, தனி முதலீட்டாளர்களுக்காக வழங்கப்பட்ட இந்த சலுகை விலைப் பங்குகளை வாங்குவதற்கு, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 130.44 முறை அதிகமான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பங்குகள் வெளியீட்டிற்கு பிறகு, சந்தையில் இன்று ரோலெக்ஸ் ரிங்க்ஸ் பங்கின் விலை 39 விழுக்காடு உயர்வுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி மும்பை பங்கு சந்தையின் கீழ் ரூ.1,249 என்ற மதிப்பில் தோன்றிய பங்கின் விலை, மேலும் கூடுதலாக 40.55 விழுக்காடு என்ற உயர்வை எட்டி ரூ.1,264 என்ற மதிப்பில் வர்த்தகமானது.
தேசிய பங்கு சந்தையில் 38.88 விழுக்காடு அளவு உயர்வுடன் ரூ.1,250 என்ற மதிப்பில் வர்த்தகமானது. குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ரோலெக்ஸ் ரிங்க்ஸ், வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் ரூ. 731 கோடி முதலீட்டை ஈர்க்க பங்கு வெளியீட்டில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.