நாட்டின் பெரு நிறுவனங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது வழக்கம். இந்தியாவை பொறுத்தவரை மும்பையைச் சேர்ந்த சென்செக்ஸ் என்ற பங்குச்சந்தையும், டெல்லியைச் சேர்ந்த தேசிய பங்குசந்தை என்ற நிப்டி ஆகிய பங்குசந்தைகள் உள்ளன. இவற்றில் முதலீடு செய்யும் நிறுவனங்களின் பரிவர்த்தனைகள் விதிமுறைகளை கண்காணிக்கும் பொறுப்பைச் செபி என்ற அமைப்பு மேற்கொண்டுவருகிறது.
செபி அமைப்பு பெரும் நிறுவனங்கள் சட்டவிதிகளின்படி நடைபெறவில்லை என்றால் அவற்றுக்கு அபராதம் விதிக்கும்படி பங்குசந்தைகளுக்கு பரிந்துரைக்கும். அதன்படி, நிப்டி பங்குச்சந்தை நடப்பு நிதிக் காலாண்டில் 250 பெருநிறுவனங்களுக்கு அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சுமார் ஆயிரம் ரூபாய் முதல் நான்கரை லட்சம்வரை அபராத தொகை 250 நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமம், பெல் நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஆயில் இந்தியா உள்ளிட்ட 31 நிறுவனங்கள் மீது நான்கரை லட்சம் அபராதம் விதித்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது தேசிய பங்குச்சந்தை நிப்டி. வர்த்தக நடவடிக்கையில் விதிமீறல், கணக்கு தணிக்கை மேற்கொள்வதில் குளறுபடி உள்ளிட்ட காரணங்களால் இந்நடவடிக்கைகள் எடுக்கச் செபி அமைப்பு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.