டெல்லி : தேசிய கைத்தறி தினத்தையொட்டி, கைத்தறி ஏற்றுமதி வளர்ச்சிக் குழுமம் மெய்நிகர் நிகழ்வாக ஏற்பாடு செய்திருந்த ஐந்து நாள் இந்திய துணி வகைகள் கண்காட்சி நாளையுடன் (ஆக.11) நிறைவு பெறுகிறது.
இந்தக் கண்காட்சியில், நாடு முழுவதிலும் உள்ள, கையால் நெய்யப்பட்ட துணி வகைகளின் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், கூட்டுறவு அமைப்புகள், கைத்தறி தொகுப்புகள், தேசிய விருது பெற்றவர்கள், இந்திய கைத்தறி முத்திரை பெற்றவர்கள் என்று 57 அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் பங்கேற்றனர்.
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கைத்தறி வளர்ச்சி ஆணையர் உதவியுடன் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது. வங்கதேசம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, நேபாளம், பூடான், மியான்மர் உள்ளிட்ட அண்டை ஆசிய நாடுகளிலிருந்து சுமார் 200 வர்த்தகப் பார்வையாளர்கள் இந்த மெய்நிகர் கண்காட்சியில் கலந்து கொண்டனர்.
சர்வதேச சந்தையில் தமது பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளைப் பெருக்குவதற்காக, கைத்தறி உற்பத்தியாளர்களுக்கு உதவும் வகையில் இந்த மெய்நிகர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்று கைத்தறி ஏற்றுமதி வளர்ச்சிக் குழுமத்தின் துணைத் தலைவர் ஜி.கோபால கிருஷ்ணன், செயல் இயக்குனர் என்.ஸ்ரீதர் ஆகியோர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : தர்மபுரியில் பிரம்மாண்ட ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை