கரோனா தொற்றின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு நிறுவனங்களும் ஆள்குறைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் மாத ஊதியம் பெறும் 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக சென்டர் ஃபார் மானிட்டரிங் இந்தியா எக்கானமி (சி.எம்.ஐ.இ) தெரிவித்துள்ளது.
இது குறித்து சிஎம்ஐஇ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜூலை மாதத்தில் மட்டும் 50 லட்சம் சம்பளதாரர்கள் வேலையிழந்துள்ளனர். கரோனா ஊரடங்கு தொடங்கியது முதல் சம்பளதாரர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகிறது. ஏப்ரல் மாதம் மட்டும் 1.77 கோடி சம்பளதாரர்கள் வேலையிழந்துள்ளனர்.
சம்பளதாரர்கள் அதிக அளவில் வேலையிழப்பது கவலைக்குரிய விஷயம். இதுபோன்ற மாத ஊதிய வேலைகளை மீட்டெடுப்பது கடினம். ஏனென்றால், இத்துறையில் பொதுவாக வேலையிழப்பு என்பது அரிதாகவே நிகழும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சம்பளதாரர்களின் எண்ணிக்கை 1.9 கோடி (22 விழுக்காடு) குறைவாகவுள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக சம்பளதாரர்களுக்கு அடுத்தப்படியாக தினக்கூலிகளும் சிறு வணிகர்களுகமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். "ஏப்ரல் மாதம் மட்டும் 12 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வேலையிழந்தனர். அவர்களில் 9.12 கோடி பேர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளை (அமைப்புசாரா பிரிவு) சேர்ந்தவர்கள்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினக்கூலிகள், சிறு வணிகர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்கள்தான் இந்த கரோனா ஊரடங்கால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக பொருளாதாரம் நல்ல முறையில் வளரும்போது அமைப்புசாரா துறைகளும் நல்ல வளர்ச்சியடையும். அதேபோல பொருளாதாரம் பாதிக்கப்படும்போது, மிகக் கடுமையான பாதிப்புகளை அமைப்புசாரா துறைகள் அடையும்.
மேலும், "பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டவுடன் அமைப்புசாரா துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகத் தொடங்கிவிட்டன. அதன்படி மே மாதம் 1.44 கோடி, ஜூன் மாதம் 4.45 கோடி, ஜூலை மாதம் 2.55 கோடி என மொத்தம் சுமார் 8.55 கோடி வேலைவாய்ப்புகள் அமைப்புசாரா துறையில் உருவாக்கப்பட்டுள்ளன" என்று சிஎம்ஐஇ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சில்லறை இணையவழி நிறுவனங்களை வாங்கும் பேச்சுவார்த்தையில் முகேஷ் அம்பானி