நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நாட்டின் ஜிடிபி என்று அழைக்கப்படுகிற ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி சரிவடைந்துள்ளது.
அதேபோல், நாட்டில் உள்ள எட்டு முக்கிய துறைகளும் சரிவை சந்தித்துள்ளன. நாட்டின் பொருளாதார நிலை, வேலைவாய்ப்புகள், புதிய முதலீடுகள், சந்தை நிலவரம், இந்த நேரத்தில் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை ஆகியவை குறித்து பொருளாதார நிபுணர் அனில் சூது ஈடிவி பாரத் செய்திகளுடன் உரையாடினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:- நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. தனியார் நுகர்வு குறைந்துள்ளது தான் இதற்கு முக்கிய காரணமாகும். அரசு முதல் கட்டமாக நுகர்வை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும். நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு ஊரகப் பகுதியாக இருக்கும் நிலையில், அரசு அங்கு நுகர்வை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயப் பொருட்களின் விலை நீண்ட நாட்களாக உயர்வு அடையவில்லை.
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட வேண்டும். ஊரக பகுதிகளில் ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும். படித்து முடித்த இளம் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் குறைவாகவே உள்ளது. இளம் தலைமுறையினர்தான் அதிகளவில் செலவு செய்பவர்கள், அவர்கள் குறைவான வருவாய் ஈட்டும்போது பொளாதாரம் பாதிக்கப்படுகிறது.
ஊதியத்தை அதிகரிப்பதோடு, உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். அப்போது தான் முன்னேற்றத்தை அடையமுடியும். இது போன்ற நேரத்தில் அரசு நிதிப் பற்றாக்குறையைப் பற்றி கவலைப்படக்கூடாது. தற்போது பண வீக்கம் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் அரசு இது குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை என்றார்.
வளர்ச்சி குறையும்போது ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும். ஏற்கெனவே ரிசர்வ் வங்கி தொடர்ந்து ஐந்து முறை வட்டி விகிதங்களைக் குறைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அதற்கான வாய்ப்பு உள்ளதா என கேட்டதற்கு?
"ரிசர்வ் வங்கி டிசம்பர் மாதத்தில் மீண்டும் வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்றும் பலரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் இது தவறான பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் இருக்கும். பொதுவாக முதலீட்டுக்கான தேவை அதிகமாக இருக்கும் சமயத்தில் தான் நிதி ஆதாரத்திற்கான தேவை அதிகமாக இருக்கும்.
ஆனால் தற்போது சந்தையில் தேவை குறைந்து, நிறுவனங்களின் கொள்ளளவு அதிகரித்துள்ளது. இதனால் புதிய முதலீடுகளுக்கான தேவையும் சரிந்துள்ளது. இந்த நேரத்தில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைப்பதால் எந்தவித பலனும் ஏற்படப்போவதில்லை.
இன்றைய சூழலில் பெருநிறுவனங்களில் தலைவர்கள், தலைமை செயல் அதிலுவலர்கள் சந்தையில் உள்ள தேவை குறைவை பற்றியே கவலைப்படுகின்றனர்" என்று கூறினார்.
இதையும் படிங்க : அமெரிக்கா- ஈரான் பதற்றம்: இந்திய பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு.!