முடக்கத்தின் பின்னணி:
இந்தியாவின் முன்னணி விமானச் சேவை போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடந்த சில மாதங்களாகவே பெரும் கடன் சுமையில் சிக்கித் தவித்துவருகிறது. சுமார் எட்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமை அதிகரித்ததன் காரணமாக ஊழியர்களுக்குச் சம்பளம் தரமுடியாமல் அந்நிறுவனம் திணறிவந்தது. அதனால் விமானங்களைச் சரிவர இயக்க முடியாமல், இந்நிறுவனம் பெரும் சோதனைகளை சந்தித்தது. இந்நிலையில், சக முதலீட்டாளர்களின் அழுத்தத்தினால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நிறுவனத்தின் பொறுப்புகளிலிருந்து கடந்த மாதம் விலகினார்.
நரேஷ் கோயலின் வெளியேற்றத்துக்குப்பின் மற்ற முதலீட்டாளர்கள் தற்காலிக நிதியுதவி அளித்து நிறுவனத்தை மீட்க திட்டமிட்டிருந்தன. ஆனால் இம்முடிவிலிருந்து பின்வாங்கியதால் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவைகளைத் தற்காலிகமாக முடக்கிக்கொண்டது.
ஜெட் ஏர்வேஸ் கடந்த வந்த பாதை:
- 1991: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் கோயலால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.
- 1993: முதன் முதலாக கமர்ஷியல் சேவைகளை மும்பையிலிருந்த தொடங்கியது.
- 1994: ஜெட் ஏர்வேஸின் 20 விழுக்காடு பங்குகள் கல்ஃப் ஏர்வேஸ் மற்றும் குவைத் ஏர்வேஸுக்கு விற்கப்பட்டது.
- 2004: தனது முதல் அயல்நாட்டு விமானச் சேவையை சென்னை- கொழும்பு இடையே தொடங்கியது ஜெட் ஏர்வேஸ்.
- 2005: நிறுவனர் நரேஷ் கோயல் பில்லியனர் பட்டியலில் சேர்ந்தார்.
- 2007: சுபர்தா ராயின் சஹாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை ஜெட் ஏர்வேஸ் ஆயிரத்து 450 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி, ஜெட்லைட் என மறுபெயரிட்டு இயக்கியது.
- 2013: தனது நிறுவனத்தின் 24 விழுக்காடு பங்குகளை 37 மில்லியன் அமெரிக்க டாலருக்கு எத்திஹட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு விற்றது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்.
- 2018 மார்ச்: ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் பிரச்னை ஏற்படத் தொடங்கியது.
- 2019 ஜனவரி - மார்ச்: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 100 விமானங்கள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறுத்திவைப்பு.
- 2019 மார்ச் 25: நிறுவன பொறுப்பிலிருந்து நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி வெளியேற்றம்.
- 2019 ஏப்ரல் 08: நிறுவனத்தை மீட்க சக பங்குதாரர்களுக்குப் பாரத ஸ்டேட் வங்கி அழைப்பு.
- 2019 ஏப்ரல் 17: பங்குதாரர்கள் நிதியுதவி செய்ய முன்வராததால் ஜெட் ஏர்வேஸ் சேவை தற்காலிகமாக நிறுத்தம்.