இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையன்று நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். தேவாயலத்தை குறி வைத்து பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐஎஸ் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டவர் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கை சுற்றுலாத் துறையை அதிகளவில் சார்ந்திருக்கும் நாடாகும். நாட்டின் சுமார் 5 விழுக்காடு ஜிடிபி சுற்றுலாத் துறையைச் சார்ந்தே உள்ளது. கடந்தாண்டு மட்டும் 23 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இவர்களின் வருகை மூலம் நாட்டின் வருவாய் 12 விழுக்காடு அளவிற்கு அதிகரித்தது.
ஆனால் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகச் சரிந்துள்ளது. 85இல் இருந்து 90 விழுக்காடு அளவிற்கு உணவகங்கள் கடைகளின் வருவாய் குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற உள்நாட்டுப் போர் 26 ஆண்டுகள் நடைபெற்ற போதிலும் சுற்றுலாத் துறை எந்தவித பாதிப்புமின்றி நடைபெற்றது. ஆனால் இந்த பயங்கரவாதத் தாக்குதல் சுற்றுலாத் துறையை முற்றிலும் முடக்கிப்போட்டுள்ளதாக இந்த துறையை நம்பி வணிகம் செய்பவர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.