தெற்காசியாவில் வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வேகம், இந்தியாவை விட அதிகமாக உள்ளதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தெற்காசிய நாடுகளின் பொருளாதார நிலை குறித்து உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,''2019ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6விழுக்காடாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த வளர்ச்சி வீதம் 2021ஆம் ஆண்டில் 6.9 விழுக்காடாகவும், 2022ல் 7.2 விழுக்காடாகவும் வளர்ச்சியடையும். வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் 2019ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி இந்தியாவை விட அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உலக சூழலின் காரணமாக தெற்காசிய முழுவதுமே இந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை இருக்கும். மொத்தமாக தெற்காசியாவின் வளர்ச்சி வீதம் 5.9 விழுக்காடாக இருக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உலக வங்கியின் தெற்கு ஆசிய மண்டலத்தின் துணை தலைவர் ஹார்ட்விக் ஸ்காபர் கூறுகையில்,'' தொழில்துறை உற்பத்தி குறைவு, இறக்குமதி குறைவு நிதிச்சந்தையில் ஏற்படும் பதற்றமான சூழல் ஆகியவை தெற்காசியாவில் பொருளாதார வளர்ச்சிக் குறவை ஏற்படுத்துகின்றன.
உலகளவில் பொருளாதாரத்தில் நிலையற்ற சூழலின் தாக்கம் தெற்காசியாவிலும் எதிரொலிக்கிறது. தனியாரின் நுகர்வை அதிகரித்தல், முதலீட்டை வரவழைத்தல் மூலம் வளர்ச்சியை பெருக்க முடியும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:‘பொருளாதார மந்தநிலை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது’ - மத்திய அமைச்சர் விளக்கம்