அதீதப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாகப் பதவியேற்றுக்கொண்ட நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் மீது அனைவருக்கும் தீவிர எதிர்பார்ப்பு உருவானது. குறிப்பாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் மீது தனிக்கவனம் செலுத்தி வலிமைமிக்க நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பொறுப்பு அரசின் முன் வைக்கப்பட்டது.
புதிதாக பொறுப்பேற்ற மோடி அரசுக்கு பொருளாதார சூழலோ சாதகமாக இல்லை. ஒருபுறம் பணப்புழக்கத்தில் ஏற்பட்ட கடும் தட்டுப்பாடு காரணமாக தொழில் துறையில் ஏற்பட்டுள்ள முடக்கம். மற்றொருபுறம் பொதுத் துறை வங்கிகளில் உருவாகியுள்ள கடுமையான நிதிச்சுமை. இந்த இரண்டின் காரணமாக சந்தையில் தேக்க நிலை ஏற்பட்டு பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
பொருளாதார சரிவு என்னும் சவால்
உலக அளவில் நடைபெறும் வர்த்தகப் போரின் காரணமாக பொருளாதாரம் கடுமையாக ஆட்டம் கண்டுள்ளது. அதன் பாதிப்பு இந்தியாவிலும் வெகுவாக எதிரொலித்துள்ளது. விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறை கிராமப் பகுதிகள் முழுவதையும் கடுமையாக பாதித்துள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள ஆட்டோமொபைல் துறையில் வேலையிழப்பு வெகுவாக அரங்கேறிவருகிறது.
கடந்த ஐந்து மாதங்களில் சுமார் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சந்தையின் நுகர்வுத்திறன் பெரும் தேக்கத்தில் உள்ளது. வருவாய்க் குறைவு காரணமாக மக்கள் முதலீடு, செலவீனங்களை மேற்கொள்ள தயக்கம்-காட்டிவருகின்றனர். இரண்டாண்டுகளாகவே தொடரும் இந்தநிலை, புதிய அரசு பொறுப்பேற்ற மூன்று மாதத்தில் வேகமான சரிவைச் சந்தித்துவருகின்றது.
சீர்த்திருத்தத்தில் இறங்கிய அரசு
பொருளாதார மந்தநிலை தீவிரமடைந்த அரசு அதை தவிர்க்க பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த சீர்த்திருத்தங்களின் தொகுப்பு இதோ...
- புதிதாகத் தொழில் தொடங்குவோருக்கு ஏஞ்சல் வரி ரத்து, பெரும் பணக்காரர்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியில் தளர்வு.
- பொதுத் துறை வங்கிகளின் நிதிச்சுமையைக் குறைக்க 70 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
- சிறு, குறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி நிலுவைத் தொகை 30 நாட்களில் கொடுக்கப்படும்.
- ஊடகத் துறை, கட்டுமானத் துறை, பல்வேறு சில்லறை விற்பனை துறைகளில் நேரடி அந்நிய முதலீடுக்கு அனுமதி.
- அண்மையில் நாட்டின் 10 பொதுத் துறை வங்கிகள் நான்காக இணைக்கப்பட்டது. இதன் காரணமாக 27ஆக இருந்த பொதுத் துறை வங்கிகள் 12ஆகக் குறைக்கப்பட்டது.
மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார சிக்கலைத் தீர்த்துவைக்கும் என அரசு நம்பிக்கையில் உள்ளது. இருப்பினும் நாட்டின் பொருளாதாரத்தை வலிமையாக்க தொடர் சீர்த்திருத்த நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும். பெரும் பலத்துடன் இரண்டாம் முறையாகப் பொறுப்பேற்றுள்ள மோடிக்கு உள்ள அரசியல் பலத்தை வைத்து இந்தியாவை பொருளாதார பலமிக்க சக்தியாக மாற்றுவாரா என்பதை வரப்போகும் நாட்கள் தீர்மானிக்கும்.